» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹூஸ்டனில் 50 ஆயிரம் இந்தியர்கள் திரண்டனர்: பிரமாண்ட கூட்டத்தில் மோடி-டிரம்ப் உரை!!

திங்கள் 23, செப்டம்பர் 2019 10:30:44 AM (IST)ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றினர்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.முதல் கட்டமாக அவர் உலகின் எரிசக்தி தலைநகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகருக்கு நேற்று முன்தினம் சென்றார்.அங்கு ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் தனி விமானத்தில் அவர் சென்று இறங்கினார். அங்கு அவருக்கு அமெரிக்க வர்த்தகம், சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குனர் கிறிஸ்டோபர் ஓல்சன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்சவர்தன் சிரிங்லா மற்றும் உயர் அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நகர பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக என்.ஆர்.ஜி. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மோடி நலமா?’ (ஹவ்டி மோடி) பிரமாண்ட நிகழ்ச்சி அமைந்தது. டெக்சாஸ் இந்திய மன்றம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் 20 நாடுகளில் வாழும் இந்தியர்களும் பங்கேற்றனர்.பிரதமர் மோடி ஏற்கனவே 2014-ம் ஆண்டு நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், 2015-ம் ஆண்டு சான்ஜோஸ் சாப் சென்டரிலும் கலந்து கொண்டதை விட ஒரு படி மேலாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

ஏனெனில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ஒரே மேடையில் தோன்றி பேசினார். இரு நாட்டு தலைவர்களும் இப்படி ஒரே மேடையில் தோன்றி பேசியது இதுவே முதல்முறை என்பது வரலாற்று நிகழ்வாக அமைந்து விட்டது.இரு தலைவர்களும் மேடையில் தோன்றி பேசியதால், கூட்டத்தினரிடையே உற்சாக வெள்ளம் கரைபுரண்டது. கூட்டத்தில் மோடி பேசுகையில், இந்தியாவும், அமெரிக்காவும் உண்மையான நட்புறவு கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு தற்போது புதிய உச்சத்தை தொட்டு இருப்பதாகவும் கூறினார்.

டிரம்பை இரு முறை தான் சந்தித்த போது அவரிடம் காணப்பட்ட இணக்கமும், உற்சாகமும் தற்போதும் அவரிடம் இருப்பதாக கூறிய மோடி, அமெரிக்க பொருளாதாரத்தை டிரம்ப் வலிமை மிக்கதாக மாற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.இந்த சந்திப்பு, இதற்கு முன் எப்போதும் இல்லாத தனிச்சிறப்புமிக்க தருணம் என்றும் மோடி தனது பேச்சின் போது பெருமையுடன் தெரிவித்தார். அதன் பிறகு டிரம்ப் பேசினார். இரு தலைவர்களும் பேசுவதற்கு முன்பு சுமார் 90 நிமிடங்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆடல், பாடல் என கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு இனிய விருந்தாக அமைந்தது. 27 குழுக்களை சேர்ந்த 400 பேர் இந்த கலை நிகழ்ச்சியை நடத்திக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளில் டெக்சாஸ் இந்திய மன்றத்தினர், ஹூஸ்டன் இந்திய துணை தூதரகத்தினர், நகர அதிகாரிகள், கவர்னர் அதிகாரிகள், ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டனர்.விழா நிகழ்ச்சி ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் ஆகிய மும்மொழிகளில் தொகுத்து வழங்கப்பட்டது. ‘மோடி நலமா?’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்திய, அமெரிக்க உறவின் முக்கியத்துவம் பற்றி அவர் எடுத்துக்கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory