» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம், உளவுத்துறை பயிற்சி: இம்ரான்கான் ஒப்புதல்!!

புதன் 25, செப்டம்பர் 2019 10:43:25 AM (IST)

"அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யும் பயிற்சி அளித்தன" என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா. பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இது, வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்பட பல நாடுகளின் தலைவர்கள் நியூயார்க் வந்துள்ளனர். இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, ஐநா வெளியுறவு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: கடந்த 1980ம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் (ஒருங்கிணைந்த ரஷ்யா) ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. 

அந்நேரம் அதனை எதிர்த்து போரிட, பாகிஸ்தானின் ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.யுடன் இணைந்து போராளிகள் குழுக்களுக்கு அமெரிக்கா ஆயுத பயிற்சி அளித்தது. அப்போது, ஜிகாதிகள்தான் ஹீரோக்களாக பெரிதும் மதிக்கப்பட்டனர். பின்னர், 1988ம் ஆண்டு மே மாதம் சோவியத் படைகள் ஆப்கனிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய அதே ஆண்டில் ஒசாமா பின்லேடன் அல்கொய்தா அமைப்பை தொடங்கினார். அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேறியது. ஆனால், அந்த போராளிகள் குழுவினருடன் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்பு நீடித்து வந்தது.

அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தினர். அப்போது, தீவிரவாதத்திற்கு எதிரானப் போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது மிகப்பெரிய தவறு. பாகிஸ்தானால் செய்ய முடியாத ஒன்றை, முந்தைய அரசு (பர்வேஸ் முஷாரப்) வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கக் கூடாது. இதனால், ஜிகாதிகள் மீதான எங்கள் நிலைப்பாட்டை மீறி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். எங்களின் நிலைப்பாட்டை ராணுவத்தில் இருந்த அனைவரும் ஏற்கவில்லை. 

இதனால், ஜெனரல் பர்வேஸ் முஷாரப்புக்கு எதிராக உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டது. இதனால், பாகிஸ்தான்தான் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.பின்லேடன் அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட போது அவருக்கு உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் யாருடனும் தொடர்பு இல்லை. மேலும், ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நிறுத்தவோ, தீர்வு காணவோ முடியாது. 19 ஆண்டாக உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், மேலும் 19 ஆண்டுகளானாலும் வெற்றி பெற முடியாது. எனவே, அதிபர் டிரம்ப், மீண்டும் தலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்றார்.

இந்தியா மீது குற்றச்சாட்டு

பாக். பிரதமர் இம்ரான்கான் மேலும் கூறுகையில், ``காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், ஐநா தீர்மானங்களையும், சிம்லா ஒப்பந்தத்தையும் தனது அரசியலமைப்பு சட்டங்களையும் மீறி இந்தியா செயல்பட்டுள்ளது. இதில், ஐநா. தனது கடமையை சரிவர செய்ய வேண்டும். இதனை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், இந்தியா இதனை உள்நாட்டு விவகாரம் என்று கூறுகிறது. அது மட்டுமில்லாமல் `உண்மை நிலையை பாகிஸ்தான் உணர வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பேசி வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும்’ என்றும் கூறியுள்ளது. இந்தியத் தேர்தல் முடிந்த பின் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று காத்திருந்தோம். ஆனால், இந்தியா எங்களை தீவிரவாதத்துக்கு நிதி வழங்கும் நாடுகள் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது,’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory