» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா ரூ.1,050 கோடி கடனுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

வியாழன் 26, செப்டம்பர் 2019 11:10:21 AM (IST)பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா சார்பில் ரூ.1,050 கோடி கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 74-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா-பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான கூட்டம் நேற்றுநடைபெற்றது. இதில், பசிபிக் பெருங்கடலின் தீவு நாடுகளான ஃபிஜி, கிரிபாடி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நெளரு, பலாவு, பப்புவா நியூ கினியா, சமாவோ, சாலமன் தீவுகள், டோங்கா, துவாலு, வனாது ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது: இந்தியாவும், பசிபிக் தீவு நாடுகளும் ஒருமித்த கொள்கைகளை உடையவை. மக்களிடையே ஏற்றத்தாழ்வைக் குறைக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும். பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொண்டுள்ள பசிபிக் தீவு நாடுகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது.

அந்நாடுகளின் வளர்ச்சிக்கு வேண்டிய பங்களிப்பை வழங்க இந்தியா உறுதிகொண்டுள்ளது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். இதில் இந்தியா முன்னேற்றம் கண்டுவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி தொடர்பாக, பசிபிக் தீவு நாடுகளுக்குத் தகுந்த உதவிகள் வழங்கப்படும். 

நிதியுதவி: 

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளுக்கு மொத்தம் ரூ.84 கோடி (ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ரூ.7 கோடி) நிதியுதவி வழங்கப்படும். மேலும், அந்த நாடுகளில் சூரிய மின் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.1,050 கோடி கடனுதவி சலுகை அடிப்படையில் வழங்கப்படும். 

சர்வதேச சூரிய சக்திக் கூட்டமைப்பில் பசிபிக் தீவு நாடுகள் பல இணைந்துள்ளன. மற்ற நாடுகளும் இந்தக் கூட்டமைப்பில் இணைய வேண்டும். பேரிடர்களைத் தாங்கவல்ல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் கூட்டணியிலும் (சிடிஆர்ஐ) பசிபிக் தீவு நாடுகள் இணைய வேண்டும் என்றார் பிரதமர் மோடி. பசிபிக் தீவு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவுக்கு வருகை தரவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

காந்தி சூரிய பூங்கா: நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா. சபைக் கட்டடத்தின் மேற்கூரையில், இந்தியா சார்பில் 50 கிலோ வாட் சூரிய மின் உற்பத்தித் திறனுள்ள தகடுகள் அமைக்கப்பட்டன. ஐ.நா. அவையின் மொத்த உறுப்பினர்களான 193 நாடுகளைக் குறிக்கும் வகையில், 193 தகடுகள் மேற்கூரையில் பொருத்தப்பட்டன. இதற்கு "காந்தி சூரிய பூங்கா என்று பெயரிட்டு, ரூ.7 கோடி நிதி இந்தியா சார்பில் அளிக்கப்பட்டது.

காந்தி அமைதிப் பூங்கா: 

நியூயார்க்கிலுள்ள இந்தியத் தூதரகம், அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நியூயார்க் பல்கலைக்கழக வளாகத்தில் 150 மரக்கன்றுகளை நட்டது. இதற்கு "காந்தி அமைதிப் பூங்கா என்று பெயரிடப்பட்டது. காந்தி சூரிய பூங்காவையும், காந்தி அமைதிப் பூங்காவையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory