» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்!!

செவ்வாய் 1, அக்டோபர் 2019 12:06:10 PM (IST)

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக் ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. 

ஆனால் பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை போரிஸ் ஜான்சனும் எதிர்கொண்டு வருகிறார். பிரெக்ஸிட் விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது. இது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்த போது, அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழிலதிபரான ஜெனிபர் ஆர்குரி என்பவரிடம் பணத்தை பெற்று கொண்டு லண்டனில் உள்ள அவரது நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் போரிஸ் ஜான்சன் சட்டத்துக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெனிபர் ஆர்குரிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது போரிஸ் ஜான்சன் மீது இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். 

கடந்த 1999-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன், பிரபல பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "விருந்து நிகழ்ச்சியின் போது எனது அருகில் அமர்ந்திருந்த போரிஸ் ஜான்சன் என் தொடையின் மீது கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார்” என கூறினார். இந்த குற்றச்சாட்டையும் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை கேவலமான பொய் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டரில் "பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நான் நினைவுபடுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது இங்கிலாந்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory