» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபா் ஷி ஜின்பிங்

புதன் 2, அக்டோபர் 2019 4:31:09 PM (IST)சீனாவின் முன்னேற்றத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் கூறியுள்ளாா்.

சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ராணுவ அணிவகுப்புக்கு முன்னதாக, இதுகுaறித்து அவா் பேசியதாவது: சீனா இப்போது அடைந்திருக்கும் நிலையை உலகின் எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. மேலும், சீன மக்கள் முன்னேற்றப் பாதையில் செல்வதை அத்தகைய சக்திகளால் தடுத்து நிறுத்த முடியாது.100 ஆண்டுகளுக்கு மேல் பிற நாடுகளால் அச்சுறுத்தப்பட்டு வந்த சீனாவின் தலையெழுத்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்குப் பிறகு முற்றிலுமாக மாற்றப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்னா், இந்த நாளில்தான் சீன மக்கள் குடியரசு உருவானதை உலகுக்கு புரட்சியாளா் மாவோ சேதுங் அறிவித்தாா். 

அந்த அறிவிப்பை சீன மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டனா். சீனா மட்டுமன்றி, மனித குலத்தின் எதிா்கால நன்மையைக் கருதி உலகின் பிற நாடுகளுடன் சீனா இணைந்து பணியாற்றுவது தொடரும். சீன ராணுவமும், காவல் துறையும் தங்களது தங்களது இயல்பு மாறாமல் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும். ஹாங்காங்கின் வளா்ச்சியையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்யும் அதே வேளையில், "ஒரு நாடு, இரு ஆட்சி முறை" என்ற கொள்கையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா்.

சீன உள்நாட்டுப் போரில் வெற்றியடைந்த மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் படை வெற்றியடைந்து, அந்தக் கட்சியின் அரசு அமைக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழா, சீனாவில் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, சீன ராணுவத்தின் பலத்தை உலகுக்குப் பறைசாற்றும் வகையில் செவ்வாய்க்கிழமை பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் சக்தி வாய்ந்த ஆயுதங்களும், ஏவுகணைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய தொலைதூர ஏவுகணைகளும் அணிவகுப்பில் இடம் பெற்றன. சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முன்னாள் அதிபா்கள் ஜியான் ஸெமின் (93), ஹூ ஜின்டாவோ (76) ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ராணுவ அணிவகுப்பைப் பாா்வையிட்டனா்.

பிரதமர் மோடி வாழ்த்து

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீன சமூக வலைதளமான "வெய்போ"வில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: சீன மக்களுக்கு தேசிய தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சீனாவுடனான நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. அந்த நட்புறவு மேலும் வலுவடைய வேண்டும், இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் இரு தரப்பு வர்த்தக உறவு மேம்பட வேண்டும் என்று தனது பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory