» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வெளிநாட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ஏவுகணை சோதனை: வட கொரியா விளக்கம்

வியாழன் 3, அக்டோபர் 2019 12:34:25 PM (IST)

வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கவுமே ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - தென்கொரியா நாடுகளின் ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதனை இரு நாடுகளும் பொருட்படுத்தவில்லை. இதனால், கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் நடைபெறவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வடகொரியா தொடர்ந்து வரிசையாக  ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. 

ஆனால், வடகொரியா செய்த சோதனை அனைத்தும் சிறிய ரக ஏவுகணைகள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதுடன், கிம் ஜாங் உடனான தனிப்பட்ட நட்பு நல்ல முறையில் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அணு ஆயுத பிரச்சனையால் முடங்கியிருக்கும் இருதரப்பு உறவை புதுப்பிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிரம்ப் துணிச்சலான ஒரு முடிவை எடுக்கவேண்டுமென வடகொரியா கூறியிருந்தது.

இந்நிலையில், அணு ஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே வரும் அக்டோபர் 5ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியானது. இதற்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், வடகொரியாவின் வன்சான் நகரில் கிழக்கு கடற்பகுதியில் (ஜப்பானிய கடல் பகுதி) 2 ஏவுகணைகளை வடகொரியா இன்று பரிசோதனை செய்துள்ளது. அவற்றில் ஒன்று ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் விழுந்ததாக தெரியவந்துள்ளது

எங்களுடைய ராணுவம் வேறு ஏவுகணைகள் ஏவப்படுகின்றனவா? என்று நிலைமையை கண்காணித்து வருவதுடன், தயார் நிலையிலும் உள்ளது என ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே,”இந்த ஏவுகணை பரிசோதனை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறிய செயல். இதற்கு நாங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதுடன், கடும் கண்டனமும் தெரிவிக்கின்றோம்” என கூறியுள்ளார்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய தலைமை தளபதி வெளியிட்ட அறிக்கையில்,”வடகொரிய மேற்கொள்ளும் இதுபோன்ற ஏவுகணை சோதனைகள், கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும். இதுபோன்ற சோதனைகளை வடகொரியா உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை பரிசோதனை செய்வது என்பது இதுவே முதல்முறை.

வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், நாட்டின் ராணுவ பலம் அதிகரிக்கவும் இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்படதாக வடகொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றிபெற்றது முக்கிய சாதனை என்றும் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நடத்தப்பட்ட சோதனையானது வெற்றி என அந்நாடு கூறினாலும், தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வெளிநாட்டு சக்திகள் எவை என தெரிவிக்கவில்லை.

ஆனால், அமெரிக்க ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவே, அணு ஆயுத ஏவுகணைகளை நாங்கள் பரிசோதனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டோம் என கடந்த காலங்களில் வடகொரியா கூறியிருந்தது.இருநாட்டு தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால் என்ன நடக்கும் என அமெரிக்காவுக்கு காட்ட விரும்பியே இந்த ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுள்ளது என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory