» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐ.நா.வில் நிதி நெருக்கடி; ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணமில்லை: பொதுச் செயலாளர் குட்டரஸ்

புதன் 9, அக்டோபர் 2019 5:54:11 PM (IST)

ஐ.நா. சபை, நிதி பற்றாக்குறையால் தள்ளாடுவதாகவும், மொத்த நிதியும் இந்த மாத இறுதிக்குள் தீர்ந்து, சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும் என்றும்  பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையில் பணியாற்றும் 37 ஆயிரம் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஐ.நா. சபை 230 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,635 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரம்) பற்றாக்குறையுடன் செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை.

2018-19-ம் ஆண்டுக்கான நிதியாக 5.4 பில்லியன் டாலர் (ரூ.38 ஆயிரத்து 399 கோடியே 40 லட்சம்) வரையறுக்கப்பட்டது. அதில் 22 சதவீத பங்களிப்பை அமெரிக்கா வழங்கியது. ஆனாலும் ஒட்டு மொத்த தொகையில் 70 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. ஐ.நா. நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும் என இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே எச்சரிக்கப்பட்டது. ஆனால் உறுப்பு நாடுகள் அதை பொருட்படுத்தவில்லை. எங்கள் பணப்புழக்க இருப்புக்களை இந்த மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம்.

எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளது. 37 ஆயிரம் ஊழியர்களின் ஊதியத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும், செலவுகளை குறைக்கும் விதமாகவும் மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளை குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது என முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அந்த கடிதத்தில் அன்டணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநில இந்தியாவில் மட்டுமல்ல ஐ.நா. வையும் பாதிப்படையச் செய்துள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory