» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜோ பிடன் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக டிரம்ப் வழக்கறிஞர் மறுப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 3:40:23 PM (IST)

அதிபர் டிரம்ப் தன் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மீது விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்தததாக எழுந்த குற்றச்சாட்டு மீதான விசாரணையில் அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கியூலியானி நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் குறித்து விசாரணை நடத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கீக்கு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பிக்கள் டிரம்ப் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெளிநாட்டு அரசுகள் தலையிட அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்தாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு கமிட்டி தலைவர் ஆடம் ஸ்கிஃப் தலைமையில் 3 ஜனநாயக்க் கட்சி  எம்.பிக்கள் அடங்கிய கமிட்டி இந்த விசாரணையை நடத்தி வருகிறது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். ஜோ பிடன் மீது ஊழல் விசாரணை நடத்தும்படி உக்ரைன் மற்றும் சீனாவுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஊழல் தொடர்பாக விசாரணை நடத்துவதும் பிற நாட்டு அரசுகளை விசாரணை நடத்தும்படி சொல்வதற்கும் தனக்கு உரிமை உள்ளது என அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையில் உக்ரைன் அதிபர் மீது அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அக்டோபர் 15ம் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை)  விசாரணை கமிட்டி முன் ஆஜராகி சமர்ப்பிக்கும்படி அதிபர் டிரம்பின் வழக்கறிஞர் ரூடி கியூலியானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணை கமிட்டி அளித்த காலகெடுவின் இறுதி நாளான நேற்று வரை ரூடி கியூலியானி விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இந்த விசாரணை சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே விசாரணை கமிட்டி கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது என ரூடி கியூலியானி கூறியுள்ளார். அதேபோல் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் அலுவலகமும் தனக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிந்தநிலையில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இதனால் அதிபர் டிரம்ப் நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.   இந்நிலையில் விசாரணைக் கமிட்டி அனுப்பிய நோட்டீஸை ஏற்று அமெரிக்க ராணுவ தலைமையகமான் பென்டகனும் துணை அதிபர் மைக் பென்சும் தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிப்பார்களா அல்லது ரூடி கியூலியானி போல் மறுப்பு தெரிவிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory