» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வாய்ப்புகள்: ஜெர்மனிக்கு பிரதமர் மோடி அழைப்பு

வெள்ளி 1, நவம்பர் 2019 3:37:12 PM (IST)தமிழ்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முனையங்களில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள் என ஜெர்மனிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் அரசுமுறை பயணமாக அந்நாட்டின் 12 துறைகளை சேர்ந்த உயரதிகாரிகள் குழுவினருடன் நேற்றிரவு டெல்லி வந்தார். இன்று காலை டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்  ஏஞ்சலா மெர்கெலுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ராஜ்கட் பகுதிக்கு சென்ற ஏஞ்சலா மெர்கெல் அங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு, அதிகாரிகள் குழுவுடன் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்துக்கு சென்ற ஏஞ்சலா மெர்கலை பிரதமர் மோடி வரவேற்றார். இந்த சந்திப்பின்போது செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வளர்ச்சி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இன்றைய ஆலோசனையின்போது மோடி-ஏஞ்சலா மெர்கெல் முன்னிலையில் 5 கூட்டு பிரகடனங்களில் இந்தியாவும் ஜெர்மனியும் கையொப்பமிட்டன. விண்வெளித்துறை, உள்நாட்டு விமான போக்குவரத்து, கடல்சார் தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட 11 புதிய ஒப்பந்தங்களும் இன்று கையொப்பமாகின.

இதன் பின்னர் பிரதமர் மோடியும் ஏஞ்சலா மெர்கலும் செய்தியாளர்களிடையே உரையாற்றினர். இன்றைய சந்திப்பின்போது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள இருதரப்பு மற்றும் பலதரப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். ஜெர்மனியில் உள்ள பொருளாதார ஆற்றல் அமைப்புகளின் முன்னோடி தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரும் 2022-ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை கட்டமைக்கவும் உறுதி ஏற்றுள்ளோம் என தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீரமைப்புகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக இந்தியா-ஜெர்மனி இடையிலான கூட்டுறவு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்த மோடி, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்கள் உற்பத்தி முனையங்களில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முன்வாருங்கள் என ஜெர்மனியை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அழைப்பு விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory