» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஜினியை இலங்கைக்கு அழைக்கவில்லை- வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்

வெள்ளி 17, ஜனவரி 2020 3:15:31 PM (IST)

 ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை என்று முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ‘ரஜினியை நான் பார்த்து வந்தது உண்மையே. அது ஒரு தனிப்பட்ட வி‌ஷயம். அதில் அரசியல் பின்னணி இருக்கவில்லை. பத்திரிகைகளில் கூறுவது போல் நான் ரஜினியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு ஏதும் விடுக்கவில்லை.

சுமார் அரை மணி நேரம் நாங்கள் கலந்துரையாடினோம். ரஜினியை சந்திக்க சென்றதும் அவரது அலுவலகத்தில் பாபாஜியின் படமும், ராமகிருஷ்ண பரமகம்சரின் படமும், யோகாநந்த பரமகம்சரின் படமும், எம் நாட்டு சுவாமி சச்சிதானந்த யோகியின் படமும் சுவரில் தொங்கவிடப்பட்டு இருந்தன. எங்கள் பேச்சு ஆன்மீக பெரியார்கள் பற்றியும் உலக நியதிகள், போக்குகள், வாஸ்தவங்கள், நடைமுறைகள், யதார்த்தங்கள் சார்ந்து இருந்தன. ரஜினி சம்பந்தமாக பலவித கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. எனினும் நான் பின்வரும் குணாதிசயங்களை அவரிடம் நேரில் கண்டேன். அவரின் அன்பு, எளிமை, ஆன்ம விசாரத்தில் உள்ள நாட்டம், குழந்தைகள் போல் வாய்விட்டு சிரிக்கக்கூடிய இறுக்கம் தவிர்ந்த சுபாவம், அசைக்க முடியாத இறை நம்பிக்கை, தாமரை மேல் நீர் போன்ற வாழ்க்கை, இயற்கையாகவே உடலிலும் பேச்சிலும் ஒரு வேகம் போன்ற குணாதிசயங்களை அவரிடம் கண்டேன்.

ரஜினி பந்தாவே இல்லாத மனிதர் எனக் கண்டு உண்மையில் வியப்படைந்தேன். சிறிய புகழை, பதவியை அடைந்து விட்டாலே பலர் தலை, கால் தெரியாது ஆடுகின்றார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் மக்கள் மனதில் நிறைந்திருக்கும் ஒரு திரைப்படக் கலைஞர் என்ற முறையில் அவர் பலத்த ‘பந்தா’ காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். எந்த ஒரு மனிதரையும் அன்புடன் வரவேற்று அளவளாவும் ஒரு பெருந்தன்மையான குணம் படைத்தவராக அவரைக் கண்டேன். ரஜினியை சந்தித்ததால் அவரின் உயரிய குணங்களை நான் அறிந்து கொண்டேன். அந்தச் சிறந்த மனிதரின் சந்திப்பை ஒரு பாக்கியமாகக் கருதுகின்றேன்.’ இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory