» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரச்சனைகளில் இருந்து மீள தாய் வழங்கிய அறிவுரை: முதல் உரையில் நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்!!

வெள்ளி 14, ஆகஸ்ட் 2020 12:22:33 PM (IST)



பிரச்சினை வரும்போது அதைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருக்காமல் அதில் இருந்து மீண்டுவர ஏதாவது செய்ய வேண்டும் என தனது தாயார் அறிவுரை வழங்கியதாக அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கமலா ஹாரிஸ், தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்து பேசினார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்த கட்சியின் சார்பில் துணை துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் (55) போட்டியிடுகிறார். இதை நேற்று முன்தினம் ஜோ பிடன் அறிவித்தார். 

இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக ஜோ பிடனுடன் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் பிரசார நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் தனது தாய் சியாமளா கோபாலனை நினைவு கூர்ந்து பேசினார். அவர் கூறியதாவது:- உலகின் எதிரெதிர் பகுதிகளை சேர்ந்த என் தந்தையும், தாயும் உலகத்தரமான கல்வியைத் தேடி அமெரிக்கா வந்தது உங்களுக்கு தெரியும். 

1960-களில் நடந்த சிவில் உரிமை போராட்ட இயக்கமே அவர்களை ஒன்றிணைத்தது. குறிப்பாக மாணவ பருவத்திலேயே ஓக்லாந்து தெருக்களில் பேரணி, நீதிக்கான ஆர்ப்பாட்டம் என அவர்கள் போராடினர். பிற்காலத்தில் அந்த போராட்டங்களில் நானும் பங்கேற்று இருக்கிறேன். அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு என்னையும் பெற்றோர் அழைத்து வருவார்கள். என்னை பெட்டியில் இறுக்கமாக கட்டி இழுத்து வருவார்கள். அந்த போராட்டங்கள் இன்றும் தொடர்கிறது. என் வாழ்க்கையில் என் அம்மா சியாமளாவின் பங்களிப்பு மிகப்பெரியது. அவர் என்னையும், சகோதரி மாயாவையும் எப்படி வளர்த்தாரென்றால், நாங்களும், ஒவ்வொரு அமெரிக்க தலைமுறையும் பேரணியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் வளர்த்திருக்கிறார்.

‘பிரச்சினை வரும்போது உட்கார்ந்து அதைப்பற்றி குற்றம் சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது, மாறாக அதில் இருந்து மீண்டு வர ஏதாவது செய்ய வேண்டும்’ என்றே எனது அம்மா அடிக்கடி கூறுவார். ஆகவே நான் கொஞ்சம் செய்திருக்கிறேன். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு செதுக்கிய சொற்களை உண்மையானதாக மாற்ற, சட்டத்தின் கீழ் சம நீதி கிடைக்க என் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கிறேன். மாவட்ட வக்கீலாக நான் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்களில், உதவிக்காக தேவைப்பட்டவர்களுக்காக போராடி வருகிறேன். கலிபோர்னியா அட்டார்னி ஜெனரலாக நான் பணியாற்றியபோது, ஆயுதங்கள், மனிதர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை பன்னாட்டு குற்றவியல் அமைப்புகளில் நிறுத்தினேன். இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.

கமலா ஹாரிசின் தந்தை டொனால்டு ஹாரிஸ் ஜமைக்காவை சேர்ந்தவர். தாய், சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டதை அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் வரவேற்று உள்ளனர். ஒட்டுமொத்த இனத்துக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என அவர்கள் கூறியுள்ளனர். கறுப்பினத்தவர், பெண்கள் மற்றும் அனைத்து குடியேறிகளுக்கும் இது ஒரு மகிழ்ச்சியான விஷயம் என அமெரிக்க தேசிய சீக்கிய பிரசாரம் அமைப்பின் மூத்த ஆலோசகர் ராஜ்வந்த் சிங் கூறினார்.

இதற்கிடையே கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில், ஜோ பிடனுக்கு 26 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) தேர்தல் நன்கொடை கிடைத்து உள்ளது. இது முந்தைய நாளை விட இரு மடங்காக அதிகம் ஆகும். இது உண்மையிலேயே உற்சாகம் அளிக்கும் விஷயம் என ஜோ பிடன் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUST



Tirunelveli Business Directory