» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கொரோனாவிற்கு எதிரான ஐ.நா.சபை தீர்மானம் : ஆதரவாக இந்தியா ஓட்டு

ஞாயிறு 13, செப்டம்பர் 2020 12:29:50 PM (IST)கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட குரல் கொடுக்கும் ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஓட்டு போட்டது.

சீனாவின் யுகானில் கடந்த டிசம்பரில் தோன்றி, தற்போது உலகின் 200-க்கு மேற்பட்ட நாடுகளில் தனது பாதச்சுவட்டினை பதித்து, 2.85 கோடி பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கியுள்ளது. 9.16 லட்சம் பேர் இந்த தொற்றுக்கு இரையாகி உள்ளனர். இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை விரும்புகிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் 193 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐ.நா. பொதுச்சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 169 நாடுகள் ஆதரவாக ஓட்டு போட்டன. ஓட்டெடுப்புக்கு பின்னர் ஐ.நா.சபைக்கான இந்திய துணைத் தூதர் கே.நாகராஜ் நாயுடு டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், "உலகுக்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பெருந்தொற்று நோய்க்கு எதிராக உலகளவில் ஒன்றுபட்டு செயல்படவும், ஒற்றுமையை நிலை நிறுத்தவும், பல தரப்பு ஒத்துழைப்பு வழங்கவும் ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்தியா வாக்கு அளித்திருக்கிறது” என கூறி உள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானம், "அனைத்து மட்டங்களிலும் சர்வதேச ஒத்துழைப்பு, பன்முகத்தன்மை, ஒன்றுமை ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் மற்றும் அதன் விளைவுகள் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு உலகம் திறம்பட பதில் அளிப்பது ஒன்றுதான் வழி. உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய தலைமைத்துவ பங்களிப்பு ஒப்புக்கொள்ளப்படுகிறது” என கூறுகிறது. இந்த தீர்மானம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிந்தைய 3-வது தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்மானம், உறுப்பு நாடுகளை, அனைத்து நாடுகளுக்கும் தரம் வாய்ந்த, பாதுகாப்பான, திறமையான, மலிவு கட்டணத்திலான பரிசோதனை, சிகிச்சை, மருந்து, தடுப்பூசி, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான அத்தியாவசிய சுகாதார தொழில் நுட்பங்கள் ஆகியவற்றுக்கு சரியான நேரத்தில் அணுகலை ஏற்படுத்த வலியுறுத்துகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளுக்கு ஆதரவும் அளிக்கிறது.

பெருந்தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், பரவலாக தடுப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான, தரமான, செயல்திறன்மிக்க, அணுகக்கூடிய, மலிவான தடுப்பூசியின் பங்கை  அங்கீகரித்தும் இருக்கிறது. இந்த தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் வாக்கு அளித்தன. உக்ரைனும், ஹங்கேரியும் ஓட்டெடுப்பை புறக்கணித்து விட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory