» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் - ஜோ பைடன் வாக்குறுதி

ஞாயிறு 25, அக்டோபர் 2020 10:55:38 AM (IST)

அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார்.

கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 83 ஆயிரத்து 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே கரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் வருகிற 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் கரோனா வைரஸ் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாகவே ஜனநாயகத்தின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் கரோனா வைரசை கையாளும் விதத்தில் டிரம்ப் நிர்வாகத்தின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்து வருகிறார். அதே சமயம் அதிபர் டிரம்ப் தேர்தலுக்கு முன்பாக கரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அதன் மூலம் மக்களின் வாக்குகளை அள்ள தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடக்க இருக்கும் தேர்தலில் தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குவேன் என ஜோ பைடன் வாக்குறுதி அளித்துள்ளார். தனது சொந்த மாகாணமான டெலாவேரில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது இதனை அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அமெரிக்க மக்கள் கரோனா வைரசுடன் வாழ கற்றுக்கொண்டதாக அதிபர் டிரம்ப் கூறுகிறார். ஆனால் உண்மையில் நாங்கள் கரோனா வைரசால் மரணிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். இது ஒரு இருண்ட குளிர்காலம்.

இந்த கொடிய வைரசால் அமெரிக்கா ஏற்கனவே 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை இழந்துள்ளது. இன்னும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய வரலாற்றில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ். அது குறைந்து வருவதற்கான அறிகுறிகளை காட்டவில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.ஆனால் டிரம்ப் ‘அதிகமில்லை, அதிகமில்லை’ என கூறி வருகிறார்.

கரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டம் டிரம்பிடம் இல்லை. அவர் மிகவும் பொறுப்பற்ற ஜனாதிபதி. அவரது நிர்வாக தோல்வியால் நாம் கைதிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் வேறு பாதையை தேர்வு செய்யலாம். நாம் ஒன்றிணைந்து உறுதியுடன் அதை எதிர்ப்போம். என்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யுங்கள். அமெரிக்கர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்க வழி செய்வேன்.

நீங்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி உங்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும். அனைத்து மாகாணங்களிலும் மக்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாக்க ஆளுநர்களுக்கு உத்தரவிடுவேன். தற்போது ஒரு வாரத்தில் செய்யப்படும் கரோனா பரிசோதனைகளை ஒரே நாளில் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன். நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். இப்போது நாம் செல்லும் விகிதத்தை விட மிக வேகமாக மறுபுறம் வெளியே வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


OXFORD EDUCATIONAL TRUSTTirunelveli Business Directory