» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்ரேல் ராணுவம்-ஹமாஸ் போராளிகள் இடையே சண்டை நிறுத்தம் அறிவிப்பு

சனி 22, மே 2021 8:47:32 AM (IST)



இஸ்ரேல் ராணுவமும், ஹமாஸ் போராளிகள் அமைப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடந்த 11 நாட்களாக நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது.

1967-ம் ஆண்டு மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரை பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. மேலும் கிழக்கு ஜெருசலேத்தை தனது தலைநகராக இஸ்ரேல் அறிவித்தது. பெரும்பாலான சர்வதேச நாடுகள் இதனை அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையில் கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் தனது தலைநகராக அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் தங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில், யூத குடியேறிகள் தங்களுடையது என்று கூறும் நிலத்தில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவதற்கு நடந்த முயற்சிகளால் அங்கு சமீப நாட்களாக பதற்றம் அதிகரித்தது. இதுதொடர்பாக இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் சம்பவங்கள் அரங்கேறின. இதில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சூழலில் கடந்த 10-ந்தேதி, பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகள் அல் அக்சா மசூதி பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் விலக வேண்டும் என எச்சரிக்கும் விதமாக இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர்.‌ஹமாஸ் அமைப்பை ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது.

இதில் காசா நகரில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவத்தின் வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் மீண்டும் இஸ்ரேல் நகரங்கள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். அதேபோல் இஸ்ரேல் ராணுவமும் மீண்டும் காசா நகர் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. இப்படி கடந்த 11 நாட்களாக இரு தரப்புக்கும் இடைவிடாமல் சண்டை தொடர்ந்து வந்தது. இருதரப்பு மோதலில் காசா நகரில் மட்டும் 100 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட 232 பேர் கொல்லப்பட்டனர். 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலை பொறுத்தவரையில் 5 வயது பச்சிளம் குழந்தைகள் உள்பட 12 பேர் பலியாகினர். 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க இரு தரப்பு மோதலை உடனடியாக கைவிட வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதுமட்டுமின்றி எகிப்து, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் இரு தரப்புக்கும் இடையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டன. 

ஆனால் சண்டை நிறுத்த அழைப்புகளுக்கு மத்தியிலும் இருதரப்பும் நேற்று முன்தினம் வரை கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு சர்வதேச தலையீட்டால் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவம் இடையிலான சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. 11 நாட்களுக்கு இடைவிடாமல் தொடர்ந்த மோதலுக்கு பிறகு இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தம் நேற்று அதிகாலை 2 மணி முதல் அமலுக்கு வந்தது. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காசா நகரில் பாலஸ்தீன மக்கள் வீதிகளில் இறங்கி அதனை கொண்டாடினர்.

அதே சமயம் இந்த சண்டையில் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் போராளிகள் அமைப்பு ஆகிய இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொண்டன.இந்த சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார். இந்த சண்டை நிறுத்தம் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை வழங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைமே 22, 2021 - 12:03:00 PM | Posted IP 162.1*****

ஹமாஸ் தீவிரவாதிகள் என்று தலைப்பு வைக்கவும்..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory