» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன தம்பதிகள் இனி 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் : அரசு அறிவிப்பு

செவ்வாய் 1, ஜூன் 2021 9:00:10 AM (IST)

மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்ததால் சீன தம்பதிகள் இனி 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட முதல் நாடாக சீனா திகழ்ந்து வருகிறது. அங்கு 144 கோடி மக்கள் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 18.47 சதவிகிதம் ஆகும்.மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனா கடந்த 1980-ல் ‘ஒரே குழந்தை' என்ற கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவந்தது.‌ அதன்படி ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அரசின் இந்த முடிவை மீறும் மக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.  எனினும்  ‘ஒரே குழந்தை’ கொள்கையால் அங்கு பிறப்பு விகிதம் பெரும் சரிவை கண்டது. இதனால் எதிர்க்காலத்தில் சீனாவில் இளைஞர்களை விட முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்ததால் கடந்த 2016-ம் ஆண்டு ஒரே குழந்தை கொள்கையை சீனா ரத்து செய்தது. அதன் பின்னர் 2 குழந்தைகள் கொள்கையை நடைமுறைக்கு வந்து தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியது.

இருப்பினும் சீனாவில் குழந்தை வளர்ப்புக்கு அதிக செலவாகும் என்பதால் பொருளாதார சூழ்நிலை கருதி பல தம்பதிகள் 2-வது குழந்தையை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சீனாவில் இந்த மாத தொடக்கத்தில், நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதம் சரிந்திருப்பதாக தெரியவந்தது. அதன்படி 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த மக்கள்தொகையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 

ஆனால் 15 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதே நிலை நீடித்தால் சீனாவில் சில ஆண்டுகளில் கடினமான வேலைகளை செய்ய இளைஞர்கள் இல்லாமல் முதியவர்களே அதிகம் இருப்பார்கள். இது வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை சீர்குலைக்கும்.இவற்றை கருத்தில் கொண்டு சீன அரசு 2 குழந்தைகள் கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தின் போது இந்த மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory