» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோவில் பதிவு செய்த பெண்ணுக்கு சிறப்பு புலிட்சர் விருது

சனி 12, ஜூன் 2021 5:22:35 PM (IST)



அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்டபோது தைரியமாக வீடியோ பதிவு செய்த பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனை வீடியோவாக பதிவு செய்தவர் டார்னெல்லா பிரேசியர் என்ற இளம்பெண். அப்போது அவருக்கு வயது 17. ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய அந்த வீடியோ தான் மிக முக்கியமான காரணம் ஆகும். உலகம் முழுவதும் பரவிய வீடியோவால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற பெயரில், பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை அம்பலப்படுத்திய அந்த வீடியோவை பதிவு செய்த இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியருக்கு உலகின் உயரிய கவுரவமாக கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஜார்ஜ் பிளாய்டின் கொலையை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக புலிட்சர் அமைப்பு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. பிரேசியரின் வீடியோவானது,  உலகம் முழுவதும் காவல்துறையின் கொடுரமான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியதாகவும், உண்மை மற்றும் நீதியை வெளி உலகிற்கு தெரிவிப்பதில் குடிமக்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுவதாகவும் புலிட்சர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory