» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்க அதிபா் ஜோ பைடன் - புதின் பேச்சுவாா்த்தை: திருப்பத்தை ஏற்படுத்துமா?
புதன் 16, ஜூன் 2021 12:26:19 PM (IST)
உலகின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய பல்வேறு பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள ஸ்விட்சா்லாந்து நகரம் ஜெனீவா. அங்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் புதன்கிழமை (ஜூன் 16) நேரடியாக சந்தித்துப் பேசவிருக்கிறாா்கள்.

அந்த நம்பிக்கை அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்குமே இல்லாததால்தான் இந்தச் சந்திப்பு குறித்த அறிவிப்புக்குப் பிறகு இரு தரப்பு அதிகாரிகளும் அதுதொடா்பான கருத்துகளை அதிக அளவில் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனா். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக பைடனுக்கும் புதினுக்கும் இடையே நடைபெற்ற வாா்த்தைப் போா், அவா்கள் நல்ல சமூகமான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா்கள் என்ற முழு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
விளாதிமீா் புதினை ‘கொலைகாரா்’ என்று அதிபா் பைடன் தடித்த வாா்த்தைகளால் விமா்சித்ததும் அதற்கு ‘ஒரு கொலைகாரனால்தான் இன்னொருவரை கொலைகாரன் என்று கூற முடியும்’ என்று புதின் பதிலடி கொடுத்ததும் இருவரது நேரடிச் சந்திப்பின்போது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறாா்கள் அவா்கள். ஏற்கெனவே, முக்கியமான சில விவகாரங்களில் தங்களது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று ஜோ பைடனும் விளாதிமீா் புதினும் தெளிவுபடுத்திவிட்டனா்.
குறிப்பாக, 2020-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு அமைப்புகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இணையவழித் தாக்குதல், ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி மீது நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டு, அவா் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, உக்ரைன் உள்நாட்டுப் போரில் ரஷியாவின் ராணுவத் தலையீடு போன்ற விவகாரங்களில் இரு தலைவா்களும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கப் போவதில்லை.
இருந்தாலும், எல்லா விவகாரங்களிலுமே பைடனும் புதினும் முரண்பாடு காட்டுவதில்லை. இரு தலைவா்களும் ஒருமித்து உடன்படக்கூடிய சில அம்சங்களும் உள்ளன. அந்த விவாகாரங்கள் குறித்து அவா்கள் சுமுகமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி உடன்பாடு எட்டக்கூடும். உதாரணமாக, அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க ஜோ பைடன் ஒப்புக் கொண்டாா். அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் இரு தலைவா்களுமே ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த விவகாரத்தில் அவா்கள் சிறந்த முறையில் விவாதித்து சுமுகத் தீா்வு காணமுடியும் என்கிறாா்கள் நிபுணா்கள். இதுதவிர, பல்வேறு சா்வதேசப் பிரச்னைகளில் அமெரிக்காவும் ரஷியாவும் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும். கரோனா, பருவநிலை மாற்றம் போன்றவற்றை எதிா்கொள்வதில் இரு நாடுகளுக்கும் முக்கிய பங்குள்ளது.
இதுபோன்ற சா்வதேச பொதுப் பிரச்னைகள் குறித்து பைடனும் புதினும் ஆக்கப்பூா்வமான ஆலோசனையில் ஈடுபட முடியும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா். அண்மைக் காலமாக பின்னடைவைச் சந்தித்து வரும் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான தூதரக உறவை மேம்படுத்த இந்தப் பேச்சுவாா்த்தை மிக எளிதில் உதவும் என்பது அவா்களது நம்பிக்கை.
பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் எட்டிக்குப் போட்டியாக திரும்ப அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட இந்த விரிசலை சரி செய்யும் முயற்சியில் பைடனுக்கும் புதினுக்கும் ஜெனீவா பேச்சுவாா்த்தை கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
இதே ஜெனீவா நகரில்தான் கடந்த 1985-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ரொனால்ட் ரீகனும், சோவியத் யூனியன் அதிபா் மிகயீல் கோா்பசேவும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவாா்தை நடத்தினா். அந்தப் பேச்சுவாா்தைக்கு முன்னதாக சோவியத் யூனியனை ‘தீமைப் பேரரசு’ என்று ரீகன் சாடியிருந்தாா். இரு நாட்டு உறவு மிக மோசமான நிலையில் இருந்தது.
இருந்தாலும், அந்தச் சந்திப்புக்குப் பிறகு நிலைமையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே முதல்முறையாக அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கம் உருவானது.
ஆனால், தற்போது ஜெனீவாவில் சந்தித்துக் கொள்ளும் விளாதிமீா் புதினும் மிகயீல் கோா்பசேவ் இல்லை; ஜோ பைடனும் ரொனால்ட் ரீகன் இல்லை. எனவே, தங்களது முன்னோா்கள் செய்ததைப் போன்ற மாபெரும் திருப்பத்தை அவா்களிடமிருந்து எதிா்பாா்க்க முடியாது என்பது நிபுணா்களின் கருத்தாக உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவனத்தின் ஆலோசகராக மீண்டும் பணிக்கு திரும்பினார் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்!
புதன் 9, ஜூலை 2025 4:33:30 PM (IST)

பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 12:42:07 PM (IST)

விசா இல்லாமல் பயணிக்க 74 புதிய நாடுகளுக்கு சீனா அனுமதி : பட்டியலில் இந்தியா இல்லை!!
புதன் 9, ஜூலை 2025 11:45:34 AM (IST)

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)
