» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உருமாற்றம் அடைந்து வரும் நோய்க் கிருமிகளால் உலகிற்கே அச்சுறுத்தல்: டெட்ரோஸ் அதனோம்

சனி 3, ஜூலை 2021 5:09:33 PM (IST)

உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ் கிருமிகளால் உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்  கூறியுள்ளார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ள மருத்துவ உலகம் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ள நிலையில், கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் இதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொதுவாகவே வைரஸ் கிருமிகள் தங்கள் புறச்சூழலை பொறுத்து உருமாற்றம் அடையும் தன்மையை கொண்டவை ஆகும். அதில் சிலவகை உருமாற்றங்கள் அந்த கிருமியை பலமிழக்கச் செய்துவிடும். ஆனால் சில சமயங்களில் இந்த உருமாற்றமானது அந்த கிருமியின் வீரியத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடும். அந்த வகையில் கரோனா வைரஸ் கிருமியானது, அது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. 

இதில் ஆல்பா வகை கரோனா, முதல் முறையாக இங்கிலாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் இந்த வகை கரோனா அதிகம் பரவியது. இதுவரை உலகம் முழுவதும் 172 நாடுகளில் ஆல்பா வகை கரோனா பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே போல் பீட்டா வகை கரோனா, முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கண்டறியப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த பீட்டா வகை கரோனா தொற்று இதுவரை உலகம் முழுவதும் 120 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காமா வகை கரோனா, முதல் முறையாக பிரேசில் நாட்டில் உள்ள மானாஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வகை கரோனாவால் பிரேசில் நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததோடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகவும் அமைந்தது. இந்த காமா வகை கரோனா தொற்று இதுவரை உலகம் முழுவதும் 72 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்ததாக இந்தியாவில் மிக வேகமாக பரவி அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வகை கரோனா கண்டறியப்பட்டது. இந்த டெல்டா வகை கரோனா இதுவரை உலகம் முழுவதும் 96 நாடுகளில் பரவியுள்ளது. இது ஆல்பா வகை கரோனாவை விட 55 சதவீதம் ஆதிக பரவும் தன்மையை கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசிகள், இந்த உருமாற்றம் அடைந்த கரோனா தொற்றுகளுக்கு எதிராக எந்த அளவு எதிர்ப்பு திறனை கொண்டிருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சில தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் கூறுகையில், தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் இந்த உருமாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக உத்தரவாதம் அளிக்கின்றன. இருப்பினும் இது குறித்து ஆய்வு செய்ய அதிக தரவுகள் தேவை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரோனா வைரஸ் போல உருமாற்றம் அடைந்து வரும் நோய்க் கிருமிகளால், உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல என்றும் டெல்டா வகை கரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ள அவர், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory