» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோவேக்ஸின் அவசரப் பயன்பாட்டுக்கு விரைவில் அனுமதி: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஞாயிறு 11, ஜூலை 2021 10:28:54 AM (IST)

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள "கோவேக்ஸின்' கரோனா தடுப்பூசியை அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக 4 முதல் 6 வாரங்களில் உலக சுகாதார அமைப்பு முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.

தில்லியில் இருந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் இணையதளம் வாயிலாக நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று அவர் பேசியது: கோவேக்ஸின் தடுப்பூசி தொடர்பான விவரங்களை அதன் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தற்போது உலக சுகாதார அமைப்பின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. அந்தத் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி அளிப்பது தொடர்பாக சில நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன்படி அதை தயாரித்த நிறுவனம் மூன்று கட்ட சோதனைகளை நடத்தி முடித்து, அதன் விவரங்களை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பாதுகாப்பு, தடுப்பூசியின் திறன், உற்பத்தியின் தரம் உள்ளிட்டவை அந்த விவரங்களில் அடங்கும். பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தடுப்பூசி தொடர்பான விவரங்களைப் பதிவேற்றம் செய்துள்ளதால், அவசரப் பயன்பாட்டுக்கான பட்டியலில் கோவேக்ஸினை சேர்ப்பது தொடர்பாக 4 முதல் 6 வாரங்களில் முடிவெடுக்கப்படும். தற்போது ஃபைசர்/பயோ என்டெக், அஸ்ட்ராùஸனகா-எஸ்கேபயோ/சீரம் இன்ஸ்டிட்யூட், அஸ்ட்ராùஸனகா- ஐரோப்பிய யூனியன், ஜான்சன், மாடர்னா, சினோஃபார்ம் ஆகியவற்றின் 6 தடுப்பூசிகளின் அவசரப் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2016-இல் எபோலா தொற்று பரவியதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. "பாத்தோஜென் எக்ஸ்' என்று பெயரிடப்பட்ட ஒரு கற்பனையான பெருந்தொற்றை நாம் எதிர்பார்ப்பதை அந்தச் செயல்திட்டம் குறிப்பிட்டது. தற்போது கரோனா தொற்று உருவெடுத்துள்ள நிலையில், பெருந்தொற்று உருவெடுக்கலாம் என்று முன்கூட்டியே சிந்தித்ததற்குப் பலன் கிடைத்தது. இந்த செயல் திட்டத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு கரோனா தொடர்பான ஆராய்ச்சி அறிக்கையை உருவாக்குவதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி நிபுணர்கள், கல்வியாளர்கள், நிறுவனங்களை உலக சுகாதார அமைப்பால் ஒன்றிணைக்க முடிந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும்: எதிர்காலத்தில் தடுப்பூசிகளைத் தயாரிப்பது மட்டுமன்றி, மருந்துகள் தயாரிப்பு, நோய்களைக் கண்டறிதல், பொதுமக்களுக்கு மருந்துகள் கிடைக்கச் செய்வது போன்ற நடைமுறைகளில் நாம் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுவது என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.  தற்போது பரிசோதனை நிலையில் 105 கரோனா தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில் 27 தடுப்பூசிகள் மூன்று அல்லது நான்காம் கட்டத்தில் உள்ளன. 

டெல்டா வகை கரோனா தொற்று அதிக அளவில் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வகை தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இரண்டு தவணை தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் இவ்வகை தொற்று தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவேதான் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory