» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டனில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு: சர்வதேச பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:40:36 PM (IST)

பிரிட்டன் வரும் சர்வதேச பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு எடுத்த கரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி புதிய உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில், டெல்டா உருமாறிய கரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இதனால் புதிய உருமாறிய கரோனா உலக நாடுகள் மத்தியில் அடுத்த அலை குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட மொத்தம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமைக்ரான் பரவிவிட்டது.

பிரிட்டனும் தென்னாப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது. இதற்கு மத்தியிலும், அங்கு இதுவரை 160 பேருக்கு ஒமைக்ரான் உருமாறிய கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகப் பிரிட்டன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "ஒமைக்ரான் உருமாறிய கரோனாவின் பரவலைக் குறைக்கவே தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நமது ஆய்வாளர்கள் ஒமைக்ரான் எப்படிப் பரவுகிறது? தடுப்பூசிகளுக்கு எதிராக எந்தளவு வேலை செய்கிறது? என்பது குறித்துக் கண்டறிய ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஒமைக்ரான் கரோனா குறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் பேசுகையில், "ஒமைக்ரான் கரோனா பரவ தொடங்கியதிலிருந்து இதுகுறித்த தரவுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதனால்தான் சர்வதேச விமான போக்குவரத்தில் சில புதிய கட்டுப்பாடுகளை நாங்கள் அறிவித்துள்ளோம்" என்றார்.

பிரிட்டனில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, பிரிட்டன் வரும் சர்வதேச பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு எடுத்த கரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த முடிவுக்குப் பிரிட்டன் விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிரிட்டன் அரசின் இந்த முடிவு விமான பயணங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் உள்ளதாக விமர்சித்துள்ளன. பிரிட்டன் அரசு இது தொடர்பான தனது முடிவை வரும் டிசம்பர் 20ஆம் தேதி மீண்டும் மறுபரிசீலனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory