» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து : 16 பேர் உடல் கருகி சாவு
வெள்ளி 19, ஜூலை 2024 8:25:22 AM (IST)
சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணம் ஜிகோங் நகரில் வணிக வளாகம் செயல்படுகிறது. 14 அடுக்குமாடி கொண்ட இந்த வணிக வளாகத்துக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். அந்தவகையில் ஏராளமானோர் வணிக வளாகத்துக்கு சென்றிருந்தனர். அப்போது திடீரென அங்கு தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் வணிக வளாகத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. எனவே அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். மேலும் பலர் பால்கனிக்கு சென்றும், ஜன்னல் வழியாக வெளியில் குதித்தும் தப்பிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களது பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மற்றொருபுறம் வணிக வளாகத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது.
அதன்படி அங்கு சிக்கியிருந்த 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். எனினும் இந்த தீ விபத்தில் 16 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த வணிக வளாகத்தில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.