» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஓமன் மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு இந்தியர் உள்பட 6 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூலை 2024 12:52:42 PM (IST)
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மசூதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஷியா பிரிவினரின் தியாக தினமான அனுசரிக்கப்படும் மொஹரம் பண்டிகையின்போது மசூதியில் அதிகம் பேர் கூடுவது வழக்கமாகும். அவர்களைக் குறிவைத்து மஸ்கட்டில் உள்ள மசூதியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்தியில், ‘மஸ்கட்டில் இமாம் அலி மசூதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒரு இந்தியர் காயமடைந்தார். அவர்களுக்கு தூதரகம் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர், காயமடைந்தவர் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் அளிக்கும்’ என்றார்.
உயிரிழந்தவர்களில் 4 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஒருவர் காவல் துறையைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் 28 பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய 3 ஐஎஸ் பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.