» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலி: அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் ராஜினாமா

புதன் 24, ஜூலை 2024 5:18:16 PM (IST)

அமெரிக்காவில் டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு எதிரொலியாக உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி தோட்டா அவரது காதில் பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர்த்ப்பினார்.

டிரம்ப் மீது தாக்குதல் நடத்திய 20 வயது இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். இருப்பினும் டிரம்ப் மீதான தாக்குதல் அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவின் உளவுப் பிரிவின் (சீக்ரெட் சர்வீஸ்) கவனக்குறைவே காரணம் என புகார்கள் எழுந்தன.

பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக நேற்று முன்தினம் மேற்பார்வை குழு விசாரணை நடத்தியது. அப்போது, டிரம்ப் மீதான தாக்குதலை கையாண்டது குறித்து உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு முதல் உளவுப் பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த கிம்பர்லி சீட்டல், டிரம்ப் பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டதாகவும், குற்றவாளி டிரம்பை நெருங்கி வந்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

அப்போது, டிரம்பின் உயிரை பறிக்க முயன்ற இந்த சம்பவம், உளவுப்பிரிவின் தோல்வி என்றும், நடந்த குளறுபடிகளுக்கு முழு பொறுப்பை ஏற்பதாகவும் அவர் கூறி உள்ளார். இந்நிலையில், உளவுப் பிரிவின் இயக்குனர் கிம்பர்லி சீட்டல் நேற்று ராஜினாமா செய்தார். 

இ-மெயில் மூலம் அவர் அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், "பாதுகாப்பு குறைபாட்டிற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். சமீபத்திய அசம்பாவித சம்பவங்கள் காரணமாக, கனத்த இதயத்துடன் இயக்குனர் பதவியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory