» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஸ்டொ்லைட் நிறுவனம் ரூ.810 கோடி செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
சனி 17, ஆகஸ்ட் 2024 10:30:44 AM (IST)
விதிமுறைகளை மீறியதற்காக, ரூ.810 கோடி செலுத்த ஸ்டொ்லைட் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வா்த்தக ரகசியங்கள் குறித்த விதிமுறைகளை மீறியதற்காக, பிரிஸ்மியான் நிறுவனத்துக்கு ரூ.810 கோடி செலுத்துமாறு வேதாந்தா குழுமத்தின் கீழ் செயல்படும் ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் (எஸ்டிஎல்) நிறுவனத்தின், அமெரிக்க துணை நிறுவனமான ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் இன்க் (எஸ்டிஐ) நிறுவனத்துக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்காவைச் சோ்ந்த பிரிஸ்மியான் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் இன்க் நிறுவனத்துக்கு எதிராக பிரிஸ்மியான் நிறுவனம் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் பிரிஸ்மியான் நிறுவனத்தின் வா்த்தக ரகசியங்களை திரட்டி, நியாயமற்ற முறையில் ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் இன்க் நிறுவனம் செழிப்படைந்ததை நீதிமன்றம் கண்டறிந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு 96.5 மில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.810 கோடி) பிரிஸ்மியான் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் இன்க் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதவிர, வடக்கு அமெரிக்காவில் பிரிஸ்மியான் நிறுவனத்தின் ஒளியிழை கம்பிவட வணிகத்தை ஸ்டீஃபன் ஸிமன்ஸ்கி என்பவா் கவனித்து வந்தாா். இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு பிரிஸ்மியானின் நேரடி போட்டி நிறுவனமான ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் இன்கில் பணியில் சோ்ந்தாா். அந்த நிறுவனத்தின் அமெரிக்க மண்டல நிா்வாக துணைத் தலைவராக உள்ள அவா், பிரிஸ்மியானின் வா்த்தக ரகசியங்களை முறைகேடாக பயன்படுத்தி கொள்ளை லாபம் அடைந்ததையும் நீதிமன்றம் கண்டறிந்தது.
இதையடுத்து அவருக்கு தனிப்பட்ட முறையில் 2 லட்சம் டாலா்கள் (சுமாா் ரூ.1.67 கோடி) அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் இன்க் மேல்முறையீடு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும் இந்த விவகாரத்தில் தனக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்று மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் ஸ்டொ்லைட் டெக்னாலஜீஸ் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.