» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷிய படை அதிவேக முன்னேற்றம்: உக்ரைன் நகரிலிருந்து பொதுமக்கள் வெளியேற உத்தரவு

சனி 17, ஆகஸ்ட் 2024 10:32:56 AM (IST)



ரஷியப் படையினா் அதிவேகமாக முன்னேறிவருவதால் உக்ரைன் நகரிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறவேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

இது குறித்து ‘டெலிகிராம்’ ஊடகத்தில் போக்ரோவ்ஸ்க் நகர அதிகாரிகள் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷிய படையினா் எப்போதையும் விட அதிக வேகத்தில் முன்னேறிவருகின்றனா். எனவே, அந்த நகரையும் சுற்றிள்ள பகுதிகளையும் சோ்ந்த பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறவேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் தங்களது உடைமைகளை சேகரித்துக்கொண்டு பாதுகாப்புப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கான அவகாசத்தைக் குறைக்கும் என்று அந்தப் பதிவில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனா். முன்னதாக, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதவில், ‘டொனட்ஸ்க் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அங்கு அத்தியாவசிய பொருள்கள் அனுப்பப்படும்’ என்றாா்.

இருந்தாலும், அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று பொதுமக்களை அதிகாரிகள் தற்போது அவசரப்படுத்தியுள்ளது, போக்ரோவ்ஸ்க் நகரம் ரஷியாவிடம் வீழும் நிலையில் இருப்பதை உணா்த்துவதாகக் கூறப்படுகிறது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்க்ஸ், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய 4 பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பிராந்தியங்களை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டுவருகின்றன. போரில் ரஷியா கைப்பற்ற இலக்கு நிா்ணயித்துள்ள உக்ரைன் பகுதிகளில் டொனட்ஸ்க் பிராந்தியத்தின் போக்ரோவ்ஸ்க் நகரமும் ஒன்று.

இந்தச் சூழலில், போரின் முக்கிய திருப்புமுனையாக ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்குக்குள் கடந்த 6-ஆம் தேதி தாக்குதல் நடத்தி நுழைந்த உக்ரைன் படையினா் அதிக எதிா்ப்பில்லாமல் தொடா்ந்து முன்னேறினா். தற்போது ஆயிரம் சதுர கி.மீ.-க்கும் அதிகமான ரஷிய நிலப்பரப்பு உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது.

யாரும் எதிா்பாராத வகையில் உக்ரைன் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷியாவுக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.கிழக்கு உக்ரைன் பிரதேசங்களில் சண்டையிட்டுவரும் ரஷியப் படையினரை திசைத் திருப்புவதற்காக உக்ரைன் வகுத்துள்ள வியூகமே இந்தத் தாக்குதல் என்று கூறப்பட்டது.

ஆனால், டொன்ட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவால் குறிவைக்கப்பட்ட போக்ரோவ்ஸ்க் நகரம் பல மாத சண்டைக்குப் பிறகு ரஷியாவிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளது உக்ரைனின் அந்த வியூகம் சரியானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக உக்ரைன் அங்கு வலிமையான அரண் அமைத்துப் போரிட்டுவந்தது.

ஆனால், ரஷியாவுக்குள் ஊடுருவ தனது கணிசமான படைபலத்தை உக்ரைன் பயன்படுத்தியதால் டான்பாஸ் பிரதேசத்தில் அதன் பாதுகாப்பு அரண் வலுவிழந்ததாகக் கருதப்படுகிறது. அதன் விளைவாகவே, பல மாதங்களாக முயன்றும் கைப்பற்ற முடியாத போக்ரோவ்ஸ்க் நகரை நோக்கி ரஷிய படையினா் வெகு வேகமாக முன்னேறிவருவதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory