» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தாய்லாந்து நாட்டின் இளம் பிரதமராக ஷினவத்ரா பதவியேற்பு
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 8:30:31 AM (IST)
தாய்லாந்து நாட்டின் இளம் பிரதமராக பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவியேற்று கொண்டார்.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சுற்றுலாத்துறைக்கு பெயர்போன நாடாக விளங்குகிறது. சுற்றுலாவை நம்பியே நாட்டின் பொருளாதாரம் அமைந்துள்ளநிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. கடந்த 2001-2006-ம் ஆண்டு அந்த நாட்டின் பிரதமராக இருந்து வந்த தக்ஷின் ஷினவத்ரா மீது ஊழல் புகார் எழுந்தது.
பின்னர் ராணுவ ஆட்சி, மக்களாட்சி என மாறி மாறி அங்கு ஆட்சி நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் தாய்லாந்து பிரதமராக ஸ்ரேத்தா தவிசின் நியமிக்கப்பட்டார். சிறை தண்டனை பெற்ற ஒருவரை அமைச்சரவையில் இடம் பெற செய்து தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அரசியலமைப்பை மீறியதற்காக பிரதமர் ஸ்ரேத்தா தவிசினை கடந்த 14-ந்தேதி பதவி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் அங்கு மும்முரமாக நடைபெற்று வந்தது. அப்போது பியூதாய் கட்சி தலைவர் பேடோங்டர்ன் ஷினவத்ரா (வயது 37) பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டார். இதனையடுத்து தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஷினவத்ரா வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் பாங்காங்கில் உள்ள மன்னர் மாளிகையில் வைத்து புதிய பிரதமர் பதவியேற்பு விழா நடந்தது. இதில் பேடோங்டர்ன் ஷினவத்ரா அந்தநாட்டின் 31-வது பிரதமராக பதவியேற்று கொண்டார். முதுமை காரணமாக தாய்லாந்து மன்னர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது சார்பில் வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டின் இளம் பிரதமராகவும், 2-வது பெண் பிரதமர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரியாக பேடோங்டர்ன் ஷினவத்ரா ஆகியுள்ளார்.