» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவின் 2-வது முக்கிய பாலத்தை தகர்த்த உக்ரைன் : அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு
திங்கள் 19, ஆகஸ்ட் 2024 3:53:50 PM (IST)
ரஷியாவின் 2-வது முக்கிய பாலத்தை தகர்த்த உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டுக்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள பாலம் ஒன்றை உக்ரைன் தகர்த்துள்ளது. ரஷியாவின் வான்னோயி நகரருகே அமைந்த இந்த பாலம் தகர்க்கப்படும் வான்வழி வீடியோ ஒன்றை வெளியிட்ட உக்ரைனின் விமான படை தளபதி மைகோலா ஒலெஸ்சக், மற்றொரு பாலம் தகர்க்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். எனினும், இந்த தாக்குதல் எப்போது நடைபெற்றது என்று தெரியவில்லை.
ரஷிய பகுதிகளில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் நோக்கில், கடந்த 6-ந்தேதி அதன் எல்லை பகுதிகளில் படைகள் மற்றும் கவச வாகனங்களை உக்ரைன் அனுப்பி உள்ளது. இது ரஷியாவின் 2-வது முக்கிய பாலம் ஆகும். இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குர்ஸ்க் பகுதியில் நேற்று மாலை உரையாற்றியபோது அனைத்து பகுதிகளிலும் நம்முடைய வீரர்கள் சிறந்த முறையில் பணியாற்றுகின்றனர் என கூறினார்.
கிளஷ்கோவோ பகுதியில் பாலம் ஒன்றை தகர்த்து விட்டோம் என கடந்த வெள்ளி கிழமை உக்ரைன் அறிவித்து இருந்தது. இந்த சூழலில் மற்றொரு பால தகர்ப்பு பற்றியும் அறிவித்து உள்ளது. எனினும், கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா, உக்ரைன் பிடித்து வைத்துள்ள தளவாடங்களின் முக்கிய மைய பகுதியான போக்ரோவ்ஸ்க் நகரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிராமம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளது.