» செய்திகள் - விளையாட்டு » உலகம்
போலந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : உக்ரைனுக்கு நாளை ரயில் பயணம்
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 11:50:30 AM (IST)
பிரதமர் மோடி போலந்து சென்றடைந்தார். அவர் நாளை போலந்து நாட்டில் இருந்து உக்ரைனுக்கு ரயிலில் செல்கிறார்.
சுமார் 2 ஆண்டுகளாக ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. ரஷியாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா எண்ணெய் வாங்குகிறது. மற்ற நாடுகள் ரஷியாவை கண்டித்தபோதிலும் இந்தியா இதுவரை கண்டித்தது இல்லை. பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு சமீபத்தில் ரஷியாவுக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் டெல்லியில் இருந்து போலந்துக்கு சென்றார். கடந்த 45 ஆண்டுகளில், இந்திய பிரதமர் ஒருவர் போலந்து செல்வது இதுவே முதல்முறை ஆகும். பிற்பகலில், போலந்து தலைநகர் வார்சா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த பயணத்தில், போலந்து அதிபர் ஆன்ட்ரஜ் செபாஸ்டியன் துடா, பிரதமர் டொனால்டு டஸ்க் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், நாளை (வெள்ளிக்கிழமை) வார்சாவில் இருந்து உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு பிரதமர் மோடி செல்கிறார். ‘ரயில் போர்ஸ் ஒன்’ என்ற சொகுசு ரயிலில் கீவ் நகருக்கு பயணம் செய்கிறார். பயண நேரம் 10 மணி நேரம் ஆகும்.
இதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், ஜெர்மன் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் ஆகியோரும் அந்த ரயிலில் கீவ் நகருக்கு சென்றுள்ளனர். கீவ் நகரில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முன்னதாக, போலந்துக்கு புறப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: போலந்து நாட்டில் ஆகஸ்டு 21 மற்றும் 22-ந் தேதிகளில் இருப்பேன். இந்தியா-போலந்து இடையிலான 70 ஆண்டுகால தூதரக உறவையொட்டி, நான் போலந்து செல்கிறேன். மத்திய ஐரோப்பாவில் இந்தியாவின் முக்கியமான பொருளாதார கூட்டாளி, போலந்து ஆகும்.
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆன்ட்ரஜ் துடா ஆகியோரை சந்தித்து பேச ஆர்வமாக இருக்கிறேன். இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். போலந்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்தித்து பேசுவேன்.
23-ந் தேதி, போலந்தில் இருந்து உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு செல்கிறேன். உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி அழைப்பின்பேரில் செல்கிறேன். உக்ரைனுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும். அங்கு 7 மணி நேரம் மட்டுமே இருப்பேன்.
ஒரு நண்பர் மற்றும் கூட்டாளி என்ற முறையில், உக்ரைனில் விரைவில் அமைதியும், நிலைத்தன்மையும் திரும்ப வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. உக்ரைன்-ரஷியா போரில் அமைதி தீர்வு காண்பதற்கான எனது யோசனைகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
JAIHINDAug 23, 2024 - 01:13:56 PM | Posted IP 172.7*****