» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை: இலங்கை அறிவிப்பு!
வியாழன் 22, ஆகஸ்ட் 2024 5:41:07 PM (IST)
இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், ஆண்டுதோறும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் விளங்குகிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்குகள் சரணாலயங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், உள்நாட்டு கலாசாரம் ஆகியவற்றைக் காண வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்.
2018 ஆம் ஆண்டில், சுற்றுலாப் பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது. இதற்காக சுற்றுலாப் பயணிகள் மொத்தம் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளனர். அதன்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறையானது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ஆறு மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹாரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, கஜகஸ்தான், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், இந்தோனேசியா, ரஷியா, நியூசிலாந்து, ஓமன், கத்தார், தென் கொரியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, தாய்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இலங்கை அமைச்சரவை இந்தியா, சீனா, ரஷியா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மார்ச் 2024 வரை இலவச விசாக்களை அனுமதித்திருந்தது. இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், "எங்கள் நாடு இந்தியாவுடனான நட்புறவு நமது வெளியுறவு கொள்கையில் மிகவும் முக்கியமாகும்” என்றார்.
செப்டம்பர் மாதத்திற்கான தரவுகளின்படி, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 30,000-க்கும் அதிகமான வருகையுடன் முன்னிலையில் இருக்கின்றனர். இது இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் 26 சதவீதமாகும். அதேநேரம் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 8,000-க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளனர்.