» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் : வைகோ பேச்சு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 8:26:10 AM (IST)

சீமை கருவேல மரங்களை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது: கோவில்பட்டியில் அடுத்த மாதம் (மார்ச்) 8–ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மகளிர் மாநாடு நடக்கிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். தற்போது ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில், தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீமை கருவேல மரங்கள் கோடைக்காலத்திலும் செழித்து வளரும். 

ஏனெனில் இதன் வேர்கள் நிலத்தடி நீரையும், இதன் இலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் கூட உறிஞ்சக் கூடியவை. இதனால்தான் கிராமங்களில் கருவேல மரங்களின் நிழலில் கால்நடைகளை கட்டி வைக்க மாட்டார்கள். சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதை ‘தினத்தந்தி‘ முன்னெடுத்து செல்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்றுபட்டு சீமை கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும். வசதி உள்ளவர்கள் பொக்லைன் இயந்திரங்களை வழங்கி சீமை கருவேல மரங்களை அகற்ற உதவ வேண்டும். தினமும் காலை, மாலையிலும், விடுமுறை நாட்களிலும் சீமை கருவேல மரங்களை அனைவரும் அகற்ற வேண்டும். இதனால் எதிர்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.

தமிழகத்தில் இருந்து ஆற்று மணலை கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்வதை தடுக்க வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும். மதுவுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுத்து நிறுத்த வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, கோவில்பட்டியில் 3 மேம்பாலங்கள் அமைக்கவும், 68 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி போடவும், 25 ஆயிரம் ஊனமுற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்தேன்.

முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட 8 ஆண்டுகளாக போராடினேன். காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்தினேன். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை வடமாநில நிறுவனத்துக்கு தாரை வார்க்க முயன்றதை தடுத்து நிறுத்தி, அதனை லாபகரமாக இயக்க ஏற்பாடு செய்தேன், என்று பேசினார். விழாவில், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ், நகர செயலாளர் பால்ராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் சிவகுமார்உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

yovanFeb 17, 2017 - 08:42:45 PM | Posted IP 117.2*****

வாய் மட்டும் இல்லைனா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications

Guru Hospital



Tirunelveli Business Directory