» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

செங்கோட்டை-புதுஆரியங்காவு இடையே சோதனை ரயில் ஓட்டம் வெற்றி

வெள்ளி 17, பிப்ரவரி 2017 5:49:21 PM (IST)செங்கோட்டை-புது ஆரியங்காவு இடையே அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதை அடுத்து விரைவில் ரயில் சேவை துவங்க இருக்கிறது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் புனலூர் வரை 49.5 கி.மீ.தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி துவங்கியது. மேற்குத்தொடர்ச்சி மலை வழியே இப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மலைக்குகைகள் அமைக்கப்படுவதால் பணி மெதுவாகவே நடந்து வருகிறது. தற்போது செங்கோட்டை-புது ஆரியங்காவு இடையே 19 கி.மீ.தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றது. இதனையடுத்து கடந்த மாதம் இப்பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

இதன் பின்னர் இப்பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. செங்கோட்டையில் இருந்து இயக்கப்பட்ட இந்த ரயிலை செய்யது சுலைமான், மனோஜ் ஆகியோர் ஓட்டிச் சென்றனர். ரயிலில் பெங்களுரு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், சென்னை தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ், மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க், துணை மேலாளர் முரளிகிருஷ்ணா ஆகியோர் பயணம் செய்து ஆய்வு செய்தனர். 90 கி.மீ.வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் குகைப்பகுதியில் 40 கி.மீ.வேகத்திலும், வளைவு பகுதியில் 30 கி.மீ.வேகத்திலும் இயக்கப்பட்டது. 

செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட ரயில் 30 நிமிடங்களில் புது ஆரியங்காவு ரயில்வே நிலையத்தை அடைந்தது. பின்னர் அங்கிருந்து செங்கோட்டைக்கு மீண்டும் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் கூறினர். இதனால் விரைவில் செங்கோட்டை-புது ஆரியங்காவு இடையே பயணிகள் ரயில் சேவை துவக்கப்படும் என கூறப்படுகிறது.புனலூர்-இடமண் இடையேயான அகலரயில் பாதை பணி நிறைவு பெற்றுள்ளது. 

தற்போது புது ஆரியங்காவு-இடமண் இடையேயான அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. இதன் பின்னர் சென்னை-கொல்லம் இடையே திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியே பயணிகள் ரயில் சேவை துவக்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory