» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஜூலை 1ம் தேதியை கருப்பு நாளாக கடைபிடிக்க வணிகர் பேரவை தலைவர் வெள்ளையன் கோரிக்கை

ஞாயிறு 25, ஜூன் 2017 6:17:19 PM (IST)

ஜூலை 1ம் தேதியை கருப்பு நாளாக கடைபிடிக்க வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் வள்ளியூரில் செய்தியாள‌ர்களிடம் கூறியதாவது: சரக்கு, சேவை வரி அமலுக்கு வருகிற ஜூலை 1ம் தேதியை கருப்பு நாளாக எங்கள் பேரவை அறிவித்துள்ளது. அன்று முதல் தமிழகமெங்கும் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்ற வேண்டும். இது ஒரு அன்னிய வரி திணிப்பு.

சுதந்திர இந்தியாவில் இது மிகப்பெரிய மாற்றம் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். மாற்றத்தை கொண்டு வருவதற்கு முன்பாக மக்களிடையே கருத்து கேட்டு அதை செய்திருக்க வேண்டும். சில்லரை வணிகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற பார்க்கும் அன்னியர்களுக்கு உதவும் வகையில்தான் இந்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள். 1991-ம் ஆண்டு உலக வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு தொடர்ந்து சில்லரை வணிகம், விவசாயம் மற்றும் எல்லா தொழில்களையும் அன்னியர்கள் கொஞ்சம், கொஞ்சமாக கைப்பற்றி கொண்டிருக்கிறார்கள். அதை முழுமையாக கைப்பற்றத்தான் சரக்கு சேவை வரி சட்டம். இது ஆன்லைன் வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு பெரிதும் பயன்படும்.

ஆன்லைன் வணிகம் உள்நாட்டில் வேரூன்றிய பிறகு சில்லரை வணிகம் இருக்காது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 30ம் தேதி நள்ளிரவு முதல் மாவட்ட தலைநகரங்களில் முக்கிய இடங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றுவது என்று எங்கள் பேரவை முடிவெடுத்து உள்ளது. அகில இந்திய வணிகர் சங்கமும் செயற்குழுவை கூட்டி இந்தியா முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர். அதிலும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கலந்து கொள்ளும். இந்த சட்டத்தை அரசு கைவிடும் வரை தொடர்ந்து போராடுவோம்.

வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராக இயக்கம் ஏற்படுத்தி அவற்றை இந்த மண்ணில் இருந்து அகற்றப்படும். வருகிற ஆகஸ்டு மாதம் 13ம் தேதி நெல்லையில் 7 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சு போட்டி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory