» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் தொடர் சாரல் மழை; களைகட்டும் சீசன் : அருவிகளில் வெள்ளப் பெருக்கு

செவ்வாய் 27, ஜூன் 2017 10:51:25 AM (IST)குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருவதை அடுத்து தொடர் சாரல் மழை காரணமாக மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலத்தில் சீசன் களைகட்டி வருகிறது. கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மாலையில் சாரல் மழையின் தீவிரத்தால் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 

தடை விதிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில் பெண்கள் உடைமாற்றும் அறை அருகே நின்ற மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் உடைமாற்றும் அறை சேதம் அடைந்தது. மேலும் மரத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த கருப்பசாமி சிலையும் சேதம் அடைந்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் மெயின் அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் புலியருவி, பழையகுற்றால அருவி சென்று குளித்தனர்.

சாரல் மழை .. வெள்ளப் பெருக்கு!!

இரவு முழுவதும் நீடித்த சாரல் மழை காலையிலும் தொடர்ந்தது. இதனால் ஐந்தருவி, மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் தொடர்ந்ததால் குளிக்க விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை. சீசன் களைகட்டி வருதை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக குற்றாலத்திலிருந்து ஐந்தருவி, பழைய குற்றாலத்திற்கும், தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவிக்கும் சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. ரயில் பயணிகளின் வசதிக்காக தென்காசி ரயில்வே நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை ரயில்கள் வரும் நேரத்தில் குற்றாலத்திற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் மேக்கரை அடவிநயினார் அணை, செங்கோட்டை குண்டாறு அணை ஆகியவற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு அணைக்கு தண்ணீர் வரும் வழியில் உள்ள நெய்யருவியிலும் அதிகமாக தண்ணீர் விழுகிறது. இங்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று குளித்து மகிழ்கின்றனர். குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் செங்கோட்டைக்கு மிக அருகில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குண்டாறு அணை உள்ளது. இங்கும் குற்றாலத்தை போலவே குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் அடித்துக் கொண்டே இருக்கும்.

நெய்யருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த குண்டாறு அணைக்கு வரும் உல்லாச பயணிகளை கவரும் வகையில் சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் படகு குழாமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குண்டாறு அணைக்கு தண்ணீர் வரும் பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்துள்ளது. இந்த நெய்யருவி ஆகும். இந்த நெய்யருவி மலைப்பகுதியில் அமைந்து இருந்தாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் அமைந்துள்ளதால் விடுமுறை நாட்களில்  இந்த அருவிக்கு உல்லாச பயணிகள் அதிக அளவில் குளித்து வந்தனர். 

இந்நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் நெய்யருவிக்குச் சென்று ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.  மேலும் கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் கும்பாவுருட்டி அருவி, மணலாறு அருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டுவதால் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கும் சென்று உற்சாக குளியல் நடத்துகின்றனர்.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory