» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை

செவ்வாய் 27, ஜூன் 2017 3:28:24 PM (IST)

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. பாபநாசம் அணை பகுதியில் 52 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

அணைக்கு வினாடிக்கு 3275.74 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1096 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிக நீர்வரத்து காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது. நேற்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 33.90 அடியாக இருந்தது. இன்று காலை அது 39 அடியாக உயர்ந்தது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் தண்ணீர் குறைந்து நீரோட்டம் இல்லாமல் இருந்ததால் தற்போது வினாடிக்கு 1096 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான சாரல் மழை மட்டும் பெய்தது. இதனால் அணைக்கு ஒரு வினாடிக்கு 8 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 32.26 அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறந்து விடப்படவில்லை. சேர்வலாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணைக்கு பாபநாசம் அணையில் இருந்து ஏராளமான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று காலை சேர்வலாறு அணை நீர்மட்டம் 30.61 அடியாக இருந்தது. அது இன்று 13 அடி உயர்ந்து 43.14 அடியாக உள்ளது.செங்கோட்டை மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 33.25 அடியாக இருந்தது. இன்று காலை குண்டாறு அணையில் முழு கொள்ளவான 36.10 அடியும் நிரம்பி மீதி தண்ணீர் நீர்வீழ்ச்சி போல் வழிந்து வருகிறது. இது பார்க்க கண் கொள்ளா காட்சியாக உள்ளது. 

இதே போல் கடனாநதி அணை, ராமநதி, கருப்பாநதி, அடவி நயினார் ஆகிய அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து ஒரே நாளில் பல அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 48 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று 49 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை 3 அடி உயர்ந்து இன்று 28.54 அடியாக உள்ளது. அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 57 அடியாக உள்ளது. வறண்டு கிடந்த வடக்கு பச்சையாறு அணையில் 3.25 அடி தண்ணீரும் நம்பியாறு அணையில் 6.77 அடி தண்ணீரும் உள்ளது.


மக்கள் கருத்து

நக்கீரன்Jun 27, 2017 - 04:48:24 PM | Posted IP 59.89*****

குளிர்ச்சியான செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory