» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விண்ணைமுட்டும் ஓம் நமசிவாய கோஷத்துடன் நெல்லையப்பர் காேவில் தேரோட்டம் கோலாகலம்

வெள்ளி 7, ஜூலை 2017 10:53:08 AM (IST)நெல்லையப்பர் கோயிலில் 513வது ஆனித் தேரோட்டம் பக்தர்களின் அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய விண்ணை முட்டும் கோஷத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் 513வது ஆண்டு ஆனித்தேரோட்டம் அரகர மகாதேவா ஓம் நமச்சிவாய என விண்ணை முட்டும் பக்தர்களின் கோஷத்துடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது.தென் மாவட்டங்களில் புராதன சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். நெல்லையப்பர் கோயில் பல்வேறு காலகட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இங்கு சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் உள்ளன.

இக்கோயில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்கோயில் 850 அடிநீளத்திலும், 756 அடி அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு பிரகாரங்கள் 387 அடி நீளமும், 42 அடி அகலமும் நடைபாதை 17 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்பிரகாரம் மற்றும் மேல் பிரகாரங்கள் 295 அடி நீளமும் 40 அடி அகலமும், நடைபாதை 17 அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்கள் 1626ல் கட்டப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும். இதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 13 அடுக்குகள் கொண்டு தேர் அலங்காரம் அமைக்கப்பட்டு தேரோட்டம் நடந்து வந்தது. ஆனால் தேரோட்டத்தின் போது காற்று வீசுவதால் தேர் சாய்ந்த நிலையில் வருவதுபோல் தோன்றும். ஆகையால் தேரின் உயரம் 9 அடுக்காக குறைக்கப்பட்டது. தற்போது 5 அடுக்குகளாக ஆக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது.

இத்தகைய சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடும், இரவு சுவாமி, அம்பாள் ரதவீதி வலமும் நடைபெற்று வந்தது. நேற்று காலை நடராஜர் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் வலம் வருதலும், பச்சை சாத்தி ரதவீதி உலாவும் நடந்தது. மாலையில் கங்காளநாதர் தங்கசப்பரத்தில் வீதிவலம் நடந்தது.

இதைதொடர்ந்து இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் திருத்தேர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கோயில் இரவு முழுவதும் திறந்திருக்கும்.இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. தேரோட்டத்தை முன்னிட்டு ரதவீதிகளில் திடீர் கடைகள், தோன்றியதால் 4 ரதவீதிகளும் விழாக்கோலம் கண்டது.
 

தமிழகத்தின் 3வது பெரிய தேர்


பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமித்தேர் தமிழகத்தின் 3வது பெரிய தேராகும். தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடியாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புகளை உடைய 513வது ஆனிதேரோட்டம் இன்று நடக்கிறது. சுவாமி தேரோட்டம் 1504லும், 13ம் நூற்றாண்டில் சுப்பிரமணியர் தேரோட்டம் நடந்ததாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

சுவாமி தேருக்கு இரும்பிலான அச்சாணி 1800ம் ஆண்டு லண்டனிலிருந்த கொண்டுவரப்பட்டு அமைக்கப்பட்டது. இதனை தற்போதும் தேரின் அடிப்பகுதியில் காணலாம். திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் புல்டோசர் மூலமே தள்ளப்பட்டு இழுக்கப்படுகின்றன. ஆனால் நெல்லையப்பர் கோயில் தேர் தொடர்ந்து 513வது ஆண்டாக பக்தர்கள் மூலம் மட்டுமே இழுக்கப்பட்டு வருகிறது. சுவாமி தேரை சுற்றிலும் சிவபுராணம், விஷ்ணுபுராணங்களை விளக்கும் வகையில் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. சமூக ஒற்றுமையை வலியுறுத்தவே ஆண்டு தோறும் கோயில்களில் தேரோட்டம் நடத்தப்படுகிறது.

இருவழிப்பாதை அமல்


ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் சுவாமி அம்பாளை தரிசிக்க இருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி, அம்பாள் பிரதான நுழைவு வாயில் வழியாக வரவேண்டும். தரிசனம் முடித்து மேலவாசல் மற்றும் வடக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

sreeJul 7, 2017 - 11:54:47 AM | Posted IP 117.2*****

ஓம் நமசிவாய.....ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய....

தமிழன்Jul 7, 2017 - 11:13:24 AM | Posted IP 180.2*****

ஓம் நமசிவாய ....... தென்னாடுடைய சிவனே போற்றி , எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory