» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் எண்ணெய்,ஷாம்பு பயன்படுத்தினால் அபராதம் : பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு

திங்கள் 17, ஜூலை 2017 8:08:51 PM (IST)
குற்றாலம் அருவிகளில் குளிக்கும் போது சுற்றுலாப் பயணிகள் எண்ணெய், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.

தென்னகத்தில் ஸ்பா என அழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு 27 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கிறது. இந்த ஆண்டு சீசன் கடந்த மே மாத இறுதியில் துவங்கியது. கடந்த மாதம் நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி குற்றாலம் வந்த போது சுகாதார வசதிகளை அதிகரிக்கவும், சில அடிப்படை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் மெயின் அருவி சாலை பூங்காவில் பழுதான சுற்றுச்சுவர், நுழைவு வாயில், இருக்கைக் கூடம், சுற்றுலாப் பயணிகள் இருக்கைகள் ஆகியவற்றை சீர்செய்து, வர்ணம் பூசி. தடுப்பு கம்பி வலைகளை அமைத்தது.மேலும் மெயின் அருவி, ஐந்தருவி பகுதியில் போதுமான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  மெயின் அருவி பகுதியில் ஆற்றுக்குள் சுற்றுலாப் பயணிகள் இறங்கி விடாமல் இருக்க தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்தருவியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அருகில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி ஆண்கள் ஒரு வழிப்பாதையில் பழுதான தரைத்தள ஓடுகள் சீரமைக்கப்பட்டன. ஐந்தருவி பெண்கள் உடைமாற்றும் அறையில் மரம் விழுந்து சேதமடைந்ததால் அப்பகுதி சீரமைக்கப்பட்டது.

அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் போது எண்ணெய், ஷாம்பு, சோப்பு போன்றவற்றை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கும் போது எண்ணெய்,ஷாம்பு, சோப்பு பயன்படுத்தினால் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதமும், இவற்றை விற்பனை செய்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும், தடைசெய்யப்பட்ட பாலிதீன் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.100 அபராதமும், இதனை விற்பனை செய்தால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விளம்பர பலகைகள்; முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsTirunelveli Business Directory