» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நேர்மைக்கு உதாரணமாக திகழும் ஊர்காவல் படைவீரர் : அரசு விருது வழங்க கோரிக்கை

வியாழன் 24, ஆகஸ்ட் 2017 12:40:10 PM (IST)
குற்றாலத்தில் கண்டெடுத்த மணி பர்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊர்காவல் படை வீரர் பாலசுப்பிரமணியனை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

தென்காசியில் ஊர்காவல் படை வீரராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்பிரமணியன் (47). இவர் குற்றாலம் சீசனை முன்னிட்டு குற்றாலம் ஐந்தருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.இவர் குற்றாலத்தில் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் குடியிருப்பு அருகே வந்து கொண்டிருந்த போது சாலை ஓரம் ஒரு மணிபர்ஸ் கிடப்பதை பார்த்துள்ளார். 

உடனடியாக அந்த மணிபர்ஸை எடுத்து குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகியிடம் ஒப்படைத்தார்.குற்றாலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி அந்த பர்ஸை சோதித்து பார்த்தார். அப்போது அந்த பர்ஸில் இருந்த ஆதார் அட்டை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை வைத்து அந்த மணிபர்ஸ் திருநெல்வேலி அருகே உள்ள தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகசிவராமன் என்பவரது மகன் கணபதி சங்கர் ( 35) எனபவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

இதனை அடுத்து கணபதி சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் குற்றாலம் காவல் நிலையம் வந்த கணபதி சங்கர் கூறும் போது, தான் தகவலின் அடிப்படையில் அவர் தனது காரில் குற்றாலம் வந்துவிட்டு ஊர் திரும்பிய போது குடியிருப்பு அருகே காரை நிறுத்திவிட்டு மணிபர்ஸை எடுத்து காரின் மேல் வைத்துவிட்டு மறதியாக காரை எடுத்து சென்ற போது மணிபர்ஸ் கீழே விழுந்துவிட்டதாக கூறினார்.மேலும் அந்த பர்ஸில் தனது ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஏடிஎம் கார்டுகள், ரயில் டிக்கெட்டுகள் மற்றும் 1800 ரூபாய் ரொக்கம் ஆகியவை இருப்பதாக கூறினார். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜானகி கணபதி சங்கரிடம் அவரது மணிபர்ஸை கொடுத்து பொருட்கள் அனைத்தும் உள்ளதா என்று கேட்டார்.

அந்த பர்ஸை பிரித்து பார்த்த கணபதி சங்கர் தனது பொருட்கள் மற்றும் பணம் அனைத்தும் அப்படியே உள்ளதாக கூறினார். அதன்படி அவரது மணிபர்ஸை குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி கணபதிசங்கரிடம் ஒப்படைத்தார். தவறவிட்ட தனது பர்ஸை பெற்றுக்கொண்ட கணபதி சங்கர் காவல்துறையினருக்கும், ஊர்காவல் படை வீரர் பாலசுப்பிரமணியனுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். 

அதனை தொடர்ந்து குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் ஊர்காவல் படைவீரர் பாலசுப்பிரமணியனை வெகுவாக பாராட்டினார்கள்.தனது நேர்மையான செயலால் காவல்துறையினரின் பாராட்டுக்களை பெற்ற ஊர்காவல் படை வீரர் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே பலமுறை காவல் துறை உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஊர்காவல் படைவீரர் பாலசுப்பிரமணியன் கடந்த 2003 ம் ஆண்டு முதல் தென்காசி காவல் நிலையத்தில் ஊர்காவல் படைவீரராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2009 ம் ஆண்டு ஆகஸ்டு 29 ம் தேதி தென்காசி காசிவிசுவநாதர் கோவில் தெப்பத்திருவிழா நடைபெற்ற போது கூட்டநெரிசலை பயன்படுத்தி ஒரு திருடன் ஒரு பெண் அணிந்திருந்த 1 லட்சம் மதிப்புள்ள தாலிச்செயினை பறித்துவிட்டு ஓடியபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாலசுப்பிரமணின் அந்த திருடனை விரட்டிசென்று பிடித்து அந்த திருடனையும் அவன் பறித்துச் சென்ற தாலிச்செயினையும் கைப்பற்றி காவல் துறையிடம் ஒப்படைத்தார்.

தென்காசி ரயில் நிலையத்தில் கடந்த 26.01.2008 அன்று பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஒரு பயணி தவறவிட்டு சென்ற சூட்கேஸை தங்க நகைகள் விலைஉயர்ந்த 2 செல்போன்கள். கைக்கடிகாரம் மற்றும் ரொக்கமாக ரூபாய் 15 ஆயிரம் ஆகிவற்றை கண்டெடுத்து தென்காசி ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதற்காக ரயில்வே காவல்துறை மட்டுமன்றி அன்றைய நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்.பி ஆஸ்ரா கர்க் ஊர்காவல் படைவீரர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். 

குற்றாலத்தில் ரூபாய் 25 ஆயிரம் பணத்துடன் கடந்த 6.1.2015 அன்று ஒரு மணிபர்ஸை கண்டெடுத்து அன்றைய குற்றாலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜமாலிடம் ஒப்படைத்து பாராட்டு பெற்றுள்ளார். தென்காசி டி.எஸ்.பியாக மயில்வாகணன் இருந்த போது கடந்த 12.06.2008 அன்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் ஒருவர் தவறவிட்டு சென்ற புதிய கம்ப்யூட்டர் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்து பாராட்டு பெற்று பெற்றுள்ளார். கடந்த 01.03.2009 அன்று தென்காசி பஸ்நிலையத்தில் ஆலங்குளம் சீட்டுகம்பெனிகாரரிடம் ஒருவன் பணத்தை பறித்து கொண்டு ஓடியவனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்

இப்படி தொடர்ந்து நேர்மையாக நடந்து ஊர்காவல் படைக்கு பல்வேறு பாராட்டுதல்களை பெற்று கொடுத்த ஊர்காவல் படைவீரர் பால சுப்பிரமணியனை திருநெல்வேலி மாவட்த்தில் எஸ்பி யாக பணிபுரிந்த தினகரன், விக்ரமன், விஜயேந்திர பிதாரி, ஆஸ்ராகர்க்,மற்றும் தென்காசி டி.எஸ்பியாக பணிபுரிந்த மயில்வாகனன், சீனிவாசன் மற்றும் ஊர் காவல்படை ஐஜி முத்துக்கருப்பன் ஆகியோர் தனித்தனி சம்பவங்களில் இவரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர். 

இவரைப்போன்று ஊர்க்காவல் படை வீர்கள் மட்டுமல்ல காவல் துறையினரும் நேர்மையாக பணியாற்றினால் அச்சமின்றி பொதுமக்கள் இருப்பர் என்றும், அதனால் பாலசுப்பிரமணியனுக்கு தமிழக அரசு காவல் துறையில் பணி வழங்கினால் சிறப்பாக இருக்கும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

S. நாகராஜன் kurinjipadiAug 26, 2017 - 11:39:12 AM | Posted IP 8.37.*****

சலூட்ட் டு பாலசுப்ரமணியம் சார் யுவர் ஹொநெஸ்டலி ஐஸ் great

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory