» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கந்துவட்டியால் கேள்விக்குறியாகும் மனித உயிர்கள் : என்ன செய்யப்போகிறது அரசு ?

திங்கள் 23, அக்டோபர் 2017 12:36:33 PM (IST)திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடு மையால் 4 பேர் தீக்குளித்தது கந்து வட்டி கொடுமை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே காட்டுகிறது.

நம் நாட்டில் அனைத்து விலைவாசிகளும் விண்ணை தொடும் அளவு ஏறிக் கொண்டிருக்க சாதாரண, நடுத்தர, ஏழை மக்கள் தங்கள் அன்றாட செலவுகள் மற்றும் திருமணம், படிப்பு, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வட்டிக்கு வாங்குகின்றனர். இதில் பலர் வங்கிகளுக்கு சென்றால் ஏகப்பட்ட நடைமுறைகள் இருப்பதால் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் பணம் வாங்குகின்றனர்.

ஆனால் அதற்கு வட்டி கட்டுவதற்குள் தான் வாங்கியவர்களுக்கு விழி பிதுங்கி விடுகிறது. தொழிலில் நஷ்டம்.அவர்களுக்கு வர வேண்டிய பணம் வராதது உள்ளிட்ட காரணங்களால் வட்டி கட்ட முடியாமல் போகிறது. மேலும் பணம் கொடுத்தவர்களும் வீட்டிற்கே வந்து மிரட்டும் தொனியில் பணம் கேட்பதால் அவமானம் அடைந்து கூனி குறுகி விடுகின்றனர்.

கந்துவட்டி கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் சில காவல்நிலையங்களில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாக பேசுவதாகவும் புகார் அளிக்க சென்றவர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் கூறுகின்றனர். இதனால் பலர் கந்து வட்டி குறித்து புகார் அளிக்கவே யோசிக்கின்றனர்.

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது கடந்த 2003 ம் ஆண்டு கந்துவட்டி தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகே கந்து வட்டியின் பாதிப்பு தமிழக மக்களுக்கு தெரிய வந்தது. இருந்தாலும் கந்துவட்டியின் கொடுமை தமிழகத்தை விட்டபாடில்லை. கடந்த வருடம் கூட மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பாதிப்பட்டவர்கள் தீ குளித்ததில் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி ஒருவரின் குடும்பம் இதே காரணத்திற்காக தற்கொலை செய்தது. அதே போல் சில நாட்களுக்கு முன் கந்து வட்டி கொடுமையால் வள்ளியூரில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்ற ஒரு சம்பவம் இன்று நெல்லையில் நடந்துள்ளது. இந்தப்பிரச்சனை குறித்து கூட நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் 5 முறைக்கு மேல் மனு அளிக்கபட்டுள்ளது. அப்போதே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய தீ குளிப்பை தடுத்திருக்க முடியும் என பாதிப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இன்று தீகுளிப்பு சம்பவம் நடந்த போது கூட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார் வரவில்லை என தெரிகிறது.அங்கு வந்தவர்கள் தான் தீயை அணைக்க முயன்றுள்ளார்கள்.ஆக மொத்தத்தில் அரசும், போலீசாரும் கந்து வட்டியால் மேலும் உயிர்கள் பலியாமால் தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது.


மக்கள் கருத்து

அசோக்.தேவா்Oct 25, 2017 - 04:22:35 PM | Posted IP 157.5*****

கந்துவட்டி என்பது இல்லை என்றால் , எங்களை போன்ற ஏழைக்கு அரசாங்கம் உதவி செய்யுமாா ...? எந்த ஒரு கந்துவட்டிகாரனும் வீடு தேடிவந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவதில்லை .... நாம் தான் அவா்களை தேடிச்சென்று கேட்கிறோம் .. கை நீட்டி பணம் வாங்கிய பிறகு குத்துது , கொடையுது என்றால் இது என்ன நியாயம் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory