» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் எதிரொலி : அரசு பஸ் டிரைவர் தற்கொலை.

புதன் 10, ஜனவரி 2018 10:33:18 AM (IST)

செங்கோட்டை அருகே அரசு பஸ் டிரைவர் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்தவர் கணேசன் ( 45). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை கிராமம் ஆகும். ஆனால் இவர் தற்போது செங்கோட்டை செல்லையா தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ம் தேதி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் கணேசனும் கலந்து கொண்டுள்ளார். கடந்த 7 நாட்களாக வேலைக்கு செல்லாத கணேசன் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். 

மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்றாமல் காலம் கடத்துவதாகவும், அதிகாரிகளும், அமைச்சர்களும் உடனடியாக வேலைக்கு வராவிட்டால் புதிதாக டிரைவர்களை நியமிப்போம் என்று அறிவித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். மேலும் நாள்தோறும் தென்காசி பணிமனை அதிகாரிகள் உடனடியாக வேலைக்கு வரவேண்டும் இல்லையெனில் நிரந்தரமாக வேலை இழக்க நேரிடும். உன்னை டிஸ்மிஸ் செய்து விடுவோம் என தொலைபேசி மூலம் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கணேசன் இந்த வேலையும் போய்விட்டால் நான் எப்படி வாழ முடியும் என்று புலம்பி கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையில் கணேசன் அவரது மனைவியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கணேசன் வீட்டிலிருந்து தேன்பொத்தை ஊருக்கு அருகில் உள்ள அவரது தோட்டத்துக்கு சென்றுள்ளார்.  பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவரது உறவினர்கள் சிலர் கணேசனின் தோட்டத்துக்கு சென்றுள்ளனர். அப்போது கணேசன் அங்குள்ள ஒரு மாமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இந்த தகவல் ஊர் முழுவதும் பரவிய நிலையில் ஊர் பொதுமக்கள் அந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். இதுபற்றி இலத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இலத்தூர் சப்இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். கணேசனுக்கு உமாசாந்தி என்ற மனைவியும், ரேவதி என்ற மகளும் சுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். உமாசாந்தி தேன்பொத்தையில் அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கணேசன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory