» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் விழுந்த மாடு சீறிய கட்டுவிரியன் பாம்பு : தென்காசியில் பரபர நிமிடங்கள்

புதன் 16, மே 2018 7:38:13 PM (IST)

தென்காசியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மாட்டை உயிருடன் மீட்ட  தீயணைப்பு படை வீரர்களை பொது மக்கள் பாராட்டினர்.

தென்காசி பழைய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கிணறு உள்ளது. இந்த கிணறு சுமார் 50 அடி ஆழம் இருக்கும். இதில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. நேற்று பழைய பஸ் நிலையம் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த ஒரு காளை மாடு எதிர்பாராதவிதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனால் அந்த மாடு உயிருக்கு ஆபத்தான நிலையில் பயங்கர சத்தத்துடன் கத்தியது.

இதைகேட்ட கார் டிரைவர்கள் கணேசன், சுப்பையா, சண்முகராஜ் மற்றும் பொது மக்கள் உடனடியாக தென்காசி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நிலைய அலுவலர் பாலசந்தர் (பொறுப்பு) தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையின் ஏட்டுக்கள் சு.கணேசன், விஜயன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் வேல்முருகன், ஆல்பர்ட் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அவர்கள் கிணற்றுக்குள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தண்ணீரில் தத்தளித்த காளை மாட்டை காப்பாற்ற வேகமாக கிணற்றுக்குள் இறங்கிய போது அந்த கிணற்றுக்குள் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு தீயணைப்பு படை வீரர்களை பார்த்து சீறியது. இதைப்பார்த்ததும் அங்கு வேடிக்கை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஒருபுறத்தில் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடும் காளை மாடு மறுபுறம் இந்த காளை மாட்டை மீட்க போகும் வீரர்களை பார்த்து சீறும் கட்டுவிரியன் பாம்பு என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் குழப்பம் அடைந்த நிலையில் பொது மக்கள் தீயணைப்பு வீரர்களை பார்த்து நீங்கள் கிணற்றுக்குள் இறங்க வேண்டாம். ஒரு மாட்டை காப்பாற்ற 5 மனித உயிர்களை பணயம் வைக்க வேண்டாம். கட்டுவிரியன் பாம்பு மிகவும் ஆபத்தானது என்று கூறினர்.

ஆனால் தீயணைப்பு படையினர் சிறிதும் அச்சம் இல்லாமல் துணிச்சலுடன் முதலில் கட்டுவிரியன் பாம்பை பிடிக்கவும், அடுத்து உயிருக்கு போராடும் காளை மாட்டை மீட்கவும் முடிவு செய்தனர்.அதன்படி மின்னல் வேகத்தில் கிணற்றில் இறங்கிய தீயணைப்பு படையினர் முதலில் சுமார் 8 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.அதன்பின் சுமார் 1 மணி நேரம் போராடி தண்ணீரில் தத்தளித்த நிலையில் உயிருக்கு போராடிய காளை மாட்டையும் உயிருடன் மீட்டனர். இந்த சம்பவம் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அப்போது பெருந்திரளாக திரண்டு நின்று அச்சத்துடன் பரபரப்புடனும் வேடிக்கை பார்த்த பொது மக்கள் தங்கள் உயிரையே பணயமாக வைத்து தங்களின் கடமையை சிறப்பாக செய்த தீயணைப்பு படையினரை வெகுவாக பாராட்டினர். மேலும் தென்காசி நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் உள்ள இந்த கிணற்றுக்கு அருகில் உள்ள புதர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு அந்த கிணற்றுக்கு மூடி போட்டு பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory