» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூடங்குளத்தில் புதிய அணுஉலை கட்ட சுப. உதயகுமாரன் எதிர்ப்பு

சனி 17, நவம்பர் 2018 4:39:46 PM (IST)

கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் எதிர்ப்பையும் மீறி, அணுஉலை வளாகத்தில் ரகசியமாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடப்பதை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும் என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் வலியுறுத்தியுள்ளார். 

கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் முதல் இரு அணுஉலைகள் செயல்படத் தொடங்கி, செயல்பட்டு வருகிறது கூடுதலாக மேலும் இரு அணுஉலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, அதற்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருகிறது. இந்த நிலையில், 5 மற்றும் 6-வது அணுஉலைகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, சுப.உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’கூடங்குளத்தில் முதல் இரு அணுமின் நிலையங்கள் கட்டக் கூடாது என்று தென் தமிழகக் கடலோர மக்களும், கரையோர மக்களும் நீண்டகாலமாகப் போராடிவருகிறோம். இந்த நிலையில், 3 மற்றும் 4-வது உலைகளை 42,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. முதல் இரண்டு உலைகளும் தோல்வி அடைந்திருக்கும் நிலையில், கூடுதலாக இரு உலைகளைக் கட்டுவதில் தீவிரம் காட்டுகின்றனர்.

ரகசியமாக 5 மற்றும் 6-வது உலைகளுக்கான பூர்வாங்கப் பணிகளை மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ அறிவிக்காமல் தொடங்குகின்றனர். 5 மற்றும் 6-வது உலைகள் எங்கே அமைக்கப்பட இருக்கின்றன, அவற்றின் விலை விவரம் என்ன, இவற்றுக்கு ரஷ்யா இழப்பீடு வழங்குகிறதா, கழிவுகள் மற்றும் எரிக்கப்பட்ட எரிகோல்களை எங்கே பாதுகாத்துவைப்பார்கள் என்பனபோன்ற எந்தத் தகவலையும் யாருக்கும் சொல்லாமல், ரகசிய நாடகம் நடைபெறுகிறது.

ரஷ்யாவுக்கு வருமானத்தை உருவாக்கிக்கொடுத்து, இந்தியர்களுக்கு நோய்களைக் கொடுக்கும் இந்த அழிவுத்திட்டத்தை முழுமையாக எதிர்ப்போம். இந்திய மக்களுக்கு எதிராக வேலைசெய்யும் மத்திய அரசையும் அணுசக்தித் துறையையும், அணுமின் கழகத்தையும், தமிழ் மக்களுக்கு எதிராக வேலைசெய்யும் தமிழக அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது ஆபத்தான அராஜக நடவடிக்கை. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory