» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கங்கைகொண்டானில் அரசுப்பேருந்துகள் - வேன் மோதி விபத்து : 6 பேர் பலி 16 பேர் படுகாயம்

ஞாயிறு 23, டிசம்பர் 2018 12:00:11 PM (IST)

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரண்டு அரசுப் பேருந்துகளும் ஒரு வேனும் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். 16 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காரைக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்திப் பயணமாக ஒரு குடும்பத்தினர் வேனில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேனை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு லேசாகக் கண் அயர்ந்ததால் நான்கு வழிச்சாலையின் ஒருமுனையில் இருந்து வேன் மறுமுனைக்குச் சென்றிருக்கிறது. அப்போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து நிலை தடுமாறியுள்ளது. 

தத்தளித்தபடியே சாலையில் ஓடிய வேன் மீது மோதிவிடாமல் இருப்பதற்காக பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் முயன்றபோது சாலையோரத்தில் இருந்த தடுப்பில் மோதியுள்ளது. அதனால் கோபமான அரசுப் பேருந்தின் ஓட்டுநர், வேன் டிரைவரை மறித்து வாய்த்தகராறு செய்திருக்கிறார். பின்னர் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டு மீண்டும் வாகனங்களை எடுத்திருக்கிறார்கள். 

அரசுப்பேருந்து ஓட்டுநர் தனது பேருந்தைப் பின்னால் எடுத்து வேனுக்கு முன்பாகச் செல்ல முயன்றுள்ளார். பின்னால் இருந்து  வேகமாக வந்துகொண்டிருந்த மதுரை-நெல்லை அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அருகில் வந்த பின்னரே சாலையில் ஒரு பேருந்து நிற்பதே தெரியவந்துள்ளது. அதனால், இரு பேருந்துகளும் மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக இரு பேருந்துகளுக்குள்ளும் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். ஒரு சிலர் வாகன இடிபாடுகளில் சிக்கினார்கள். இந்த கோர விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் ஆம்புலன்ஸ்கள் அங்கு சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் 16 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இருவரது நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory