» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு எடுக்க தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெள்ளி 11, ஜனவரி 2019 6:22:18 PM (IST)

தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு எடுக்க தடை விதித்து திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஜோயல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குகூட எந்தவித அனுமதியும் இல்லாத நிலையில் சட்ட விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தின் மூலமாக தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தினை கடந்த 2011ம் ஆண்டு முறைகேடாக நடைமுறைக்கு கொண்டு வந்தனர். 

தினந்தோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீரை உறிஞ்சி எடுத்து சுத்திகரித்து குடிநீர் என்ற பெயரில் முழுக்க முழுக்க மோசடி செய்து தொழிற்சாலைகளுக்கு 1000 லிட்டர் தண்ணீர் வெறும் 15 ரூபாய் என அடிமட்ட விலையில் விற்று, அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கவேண்டும் என்று  பசுமை தீர்ப்பாயத்தில் திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். 

இந்த பொதுநல வழக்கில் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் கடந்த 28.11.2018 அன்று ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்ககூடாது, அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று(11-ம் தேதி) உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திர சூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர்  அனிதா செனாய் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் முடிவில், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து 20எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் எடுக்கவேண்டும். 

எக்காரணம் கொண்டும் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட மற்ற எந்த தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் எடுக்ககூடாது என்று அதிரடியாக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், இந்த வழக்கில் வரும் 21ம் தேதிக்குள் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்திடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் தூத்துக்குடி ஜோயல் கூறும் போது, பலவருட காலமாக பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் வேதனையில் வாழ்ந்து வரும் விவசாயிகளின் துயர் துடைக்கவும், மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினர் இயற்கையோடு வளமாக வாழ நிரத்தர தீர்வு கிடைக்கும் வரை நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாங்கள் இறுதிவரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 


மக்கள் கருத்து

ஆப்Jan 11, 2019 - 07:33:10 PM | Posted IP 141.1*****

மக்கள் பிரச்சினை சார்ந்த தீர்ப்பு.நல்ல தீர்ப்பு.

ஒருவன்Jan 11, 2019 - 06:37:01 PM | Posted IP 162.1*****

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒருத்தர் சொன்னாரே என்ன ஆச்சு ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory