» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளிக்கு ஆசிரியர்கள் கேட்டு உண்ணாவிரத போராட்டம் : முன்னாள் செங்கோட்டை சேர்மன் அறிவிப்பு

வியாழன் 16, மே 2019 6:13:05 PM (IST)

செங்கோட்டை ஒன்றியம் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிரந்தர தலைமையாசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் நியமிக்க கோரி செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சீவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடம் ஆகியும் நிரந்தர தலைமை ஆசிரியர் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவை பயிற்றுவிக்க அனுமதி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் இந்த பள்ளியில் அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தப்பட வில்லை. இதுபற்றி கடந்த 10.09.2018 மற்றும் 12.11.2018 ஆகிய தேதிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. 

சீவநல்லூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய, பாமர மக்கள் மற்றும் விவசாய கூலிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகமாக வசிப்பதால் பெரும்பாலான மாணவர்கள் வணிகவியல் பாடப்பிரிவையே விரும்புகின்றனர். எனவே இந்த பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவு தொடங்கிட உரிய அனுமதி வழங்கிட வேண்டும்.இந்த பள்ளிக்கு நிரந்தர தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அலுவலக இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர், துப்புரவு பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். சத்துணவு அமைப்பாளர், உதவியாளர்  சத்துணவு சமையலர் ஆகியோரை உடனடியாக நியமிக்க வேண்டும். பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் பாமர ஏழை எளிய விவசாய கூலித்தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்திட மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாத பட்சத்தில் அறவழியில் போராட முடிவு எடுத்து பள்ளி திறக்கும் நாளான வரும் ஜூன் 3ம் தேதி சீவநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக உண்ணாநோன்பு இருக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு சட்டநாதன் கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

கோரிக்கை மனுவின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாநில பள்ளி கல்வித்துறை இயக்குனர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர், மாநில பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்;.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory