» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிமுக அரசின் ஊழலை மறைப்பதற்காக மாவட்டங்கள் பிரிப்பு : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 12:27:07 PM (IST)அதிமுக அரசின் ஊழலை ,மூடி மறைப்பதற்காக தமிழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு தினம் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248-வது நினைவு நாள் இன்று. இந்த நாளில், அவரது உருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து என்னுடைய மரியாதையை செலுத்தியிருக்கிறேன். ஒண்டிவீரன், சுமார் 2,000 வீரர்களைக் கொண்டிருக்கக்கூடிய ஆங்கிலேய தளபதியை எதிர்த்துப் போராடி, வெற்றிகண்டவர். அவருக்குத் தான் கருணாநிதி ஆட்சியில் மணிமண்டபம் கட்டுவதற்கு உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றைக்கு இந்த மணிமண்டபம் இங்கு அமைந்திருக்கிறது.

அவர் எந்த உணர்வுடன் போராடினாரோ, அந்த உணர்வை கருணாநிதி உள்ளத்திலே பதிய வைத்துக்கொண்டு அருந்ததியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று, வெறும் அறிவிப்போடு இல்லாமல், சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டு வந்து சட்டமாக்கி, அதனை நிறைவேற்றினார். அந்த சட்டத்தை நிறைவேற்றுகின்ற அந்த நாளில், கருணாநிதி உடல் நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அதனால், அவருக்குப் பதிலாக துணை முதல்வராக இருந்த நான் அதனை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இது எனக்குக் கிடைத்த பெருமை. 2011-ல் எப்போது அதிமுக ஆட்சிக்கு வந்ததோ, இப்போது 3-வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பால் வார்ப்பார்கள் ஆனால், பால் விலை உயர்வினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைக்கேட்டால், கொள்முதல் விலையை உயர்த்தியதால், பால் விலை உயர்வு உயர்த்தப்பட்டிருப்பதாக பெருமையாக சொல்கிறார். 

கொள்முதல் செய்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பிளவை ஏற்படுத்தும் முயற்சி இது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அத்துறை லாபகரமாக இயங்குவதாக பெருமையாக சொல்கிறார். ஆனால், முதல்வர் பழனிசாமி, நஷ்டத்தில் இயங்குவதால் பால் விலையை உயர்த்துவதாக சொல்கிறார். எது உண்மை, எது பொய் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். மாவட்டங்கள் பிரிக்கப்படுவது அவர்கள் செய்திருக்கும் ஊழல், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது. நல்ல எண்ணத்துடன் செய்வதாக நான் கருதவில்லை. இவ்வாறு ஸ்டாலின் கூறினார். முன்னதாக மு.க.ஸ்டாலினுக்கு ஆதிதமிழர் பேரவையினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அறித்தனர். 


மக்கள் கருத்து

sekarAug 21, 2019 - 12:38:16 PM | Posted IP 108.1*****

ஆதாரம் இருந்தால் வழக்கு போடவேண்டியதுதானே? சும்மா மாங்காய் புளித்து தேங்காய் புளித்து என்றால் கேவலமாக தெரியவில்லையா ? இந்த விஞ்சான திருடர்களுக்கு

சாமிAug 20, 2019 - 05:01:42 PM | Posted IP 162.1*****

நமக்கு தெரிந்தது அது ஒண்ணுதானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory