» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டீக்கடைக்குள் புகுந்த பாம்பை பிடித்து ஆய்வாளர் அசத்தல் : ஆச்சரியமாக பார்த்த பொதுமக்கள்

திங்கள் 9, செப்டம்பர் 2019 6:13:44 PM (IST)

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சாம்சன், கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்றை தனது கையால் பிடித்து பத்திரமாக ஓடைக்குள் இறக்கி விட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

வீரவநல்லூர் அருகே உள்ள ரெட்டியார்புரம் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்காக பந்தோபஸ்து பணியில் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அருகே உள்ள டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் பாம்பு ஒன்று புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் சாம்சன், டீக்கடைக்கு சென்று அங்கிருந்த பாம்பை தனது கையில் லாவகமாக பிடித்தார்.  சிறிதும் அச்சமின்றி தனது கையில் பாம்பை தூக்கி வந்தார். அப்போது அந்த பாம்பு, சாம்சனின் தோள்பகுதி வழியாக தலை மீது ஏறி நின்றது.தலைமீது ஏறி பாம்பு நிற்பது குறித்து கவலைப்படாத சாம்சன், அதை பூமாலை போல போட்டுக் கொண்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். சிறிது தூரம் சென்ற அவர், அங்கிருந்த ஓடையில் பாம்பை இறக்கி விட நினைத்து தனது உடலை சாய்த்தார். அந்தப் பாம்பும், சாம்சனின் உடலில் இருந்து மெதுவாக இறங்கி, அப்படியே ஓடைக்குள் சென்றது.

பாம்பைக் கண்டு இன்ஸ்பெக்டர் சாம்சன் அச்சப்படாததும், அதை தனது தோள்மீது மாலை போல் போட்டுக் கொண்டு, நடந்து வந்து ஓடையில் பத்திரமாக இறக்கி விட்டதையும் அங்கிருந்த மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.இக்காட்சியை சிலர் தங்களது செல்போனில் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காவல் ஆய்வாளர் சாம்சனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Sep 10, 2019 - 09:36:56 AM | Posted IP 108.1*****

சின்ன வயசுல நம்மள மாதிரி பாம்பு பிடிச்சி விளையாண்டிருப்பாரோ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory