» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடவிநயினார் அணை, மக்கள் அச்சப்பட வேண்டாம் : தென்காசி ஆர்.டி.ஓ.,அறிவிப்பு

செவ்வாய் 10, செப்டம்பர் 2019 6:20:50 PM (IST)

செங்கோட்டை அருகே மேக்கரை அடவிநயினார் அணை மதகு பழுதானதை அடுத்து அது தற்காலிகமாக சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என தென்காசி கோட்டாட்சித்தலைவர் பழனிக்குமார் நிருபர்களிடம் கூறினார்.

இதுகுறித்து தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சித் தலைவர் பழனிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:செங்கோட்டை வட்டம் மேக்கரை கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் கீழ் பகுதியில் அனுமாநதியின் குறுக்கே 670 மீ நீளத்தில் 132.22 அடி உயரத்தில் 174 மி.கன அடி கொள்ளளவு கொண்ட முற்றிலும் கல் அணை கடந்த 2004ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம் என அழைக்கப்படுகிறது. நடப்பு கார் பாசன சாகுபடிக்கு அடவிநயினார் அணையின் பாசன திட்டத்தில் உள்ள 2147.47 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கடந்த மாதம் 28ம் தேதி 5 கன அடி வினாடிக்கு மேட்டுக்கால்வாயிலும், 15 கடி அடி வினாடிக்கு கரிசல்கால் ஆற்று மதகு வழியாகவும் மொத்தம் 20 கன அடி வினாடிக்கு திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் அணையானது அதன் முழுக் கொள்ளளவை முழுமையாக கடந்த மாதம் 29ம் தேதி மாலை 6 மணிக்கு எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் தானாக வழிந்தோடும் வழியாக வெளியேறியது. கடந்த 7ம் தேதி மேட்டுக்கால் மதகினை உதவி பொறியாளர் உதவி செயற்பொறியாளர் முன்னிலையில் செயற்பொறியாளர் அறிவுரையின்படி கூடுதலாக தண்ணீர் திறக்க முற்பட்ட போது அணையின் மேட்டுக்கால் மதகு இயங்க மிக சிரமமாக இருந்தது. மீண்டும் மறுநாள் 7ம் தேதி திறக்க முயற்சித்ததில் மதியம் 12.30 மணி அளவில் அணையின் உட்புறமாக அடித்து வரப்பட்ட மரக்கட்டை ஒன்று அணை மதகு கீழ்பகுதியில் சிக்கிக் கொண்டது. அதனால் அணை மதகு முழுவதுமாக கீழே இயங்கவில்லை.

இதன் காரணமாக மேட்டுக்கால்வாய் வழியாக 30 கன அடி நீர் வினாடிக்கு வெளியேறி வந்தது. இதனால் கால்வாயின் பக்கவாட்டு சுவற்றின் மேல் வழியாக நீர் வெளியேறியது. இதன் காரணமாக அணைக்கு வரக்கூடிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான தார்சாலை  ஓரத்தில் கரை அரிப்பு ஏற்பட்டு அங்கிருந்த கல்கட்டு சுவரும் விழத் துவங்கியது. தொடர்ந்து அணை மதகு இறக்கி விடப்பட்டு இரவு அதிக நேரம் ஆனதால் தண்ணீர் திறப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

மேலும் அணையின் மேட்டுக்கால் மதகு தற்போது இயக்கப்பட்டு 20 கன அடி வினாடிக்கு என்ற வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்தண்ணீர் முழுவதும் மேட்டுக்கால் பாசனத்திற்கு விரயமின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாலையும் சுமார் 30 மீ நீளத்திற்கு அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி மேற்படி சேதமடைந்த பகுதிகள் தற்காலிகமாக சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அப்பகுதியில் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அடவிநயினார் அணை கால்வாய் சேதமடைந்த பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாதவாறு  மணல் மூடைகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு வருவாய் துறை, பொதுப்பணித்துறை, காவல் துறையினர் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அச்சன்புதூர் காவல்துறை மூலம் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி நிகழ்வினால் பொதுமக்களுக்கோ மற்றும விளை நிலங்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்ற விபரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அவரின் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கோட்டாட்சித் தலைவர் பழனிக்குமார் கூறினார்.

பேட்டியின் போது, கோட்டாட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்  அருணாசலம், தாசில்தார்கள் கடையநல்லூர் அழகப்பராஜா, செங்கோட்டை ஒசானாபெர்னாண்டோ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா ஜோசப், உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory