» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : 3 சுற்று வாக்குகள் எண்ணிக்கை நிறைவு

வெள்ளி 4, அக்டோபர் 2019 12:32:04 PM (IST)

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் கண்காணிப்பில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம். அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர்.இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் இன்பதுரை, அப்பாவுவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிடும் போது, வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால், அதையே காரணமாக சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம், இன்பத்துரை வெற்றி சரியான விதிகளின் படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. ஆகவே 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு எந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் வரும் 4ம் தேதி காலை 11.30மணிக்குள் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.

அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று, இன்பதுரை சார்பில் அன்றைய தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பாவுவிற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பாவு தரப்பில், வாக்குகள் எண்ணுவதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளதை கருத்தில் கொண்டே, நீதிமன்றம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இன்பதுரை மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராதாபுரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு தடை கிடையாது. 203 தபால் ஓட்டுகள் மறுபடி எண்ணப்பட வேண்டும். கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறுபடி எண்ண வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எந்திரங்கள் உயர் நீதிமன்றத்திற்கு நேற்றே பாதுகாப்புடன் திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. 

அப்பாவு மற்றும் இன்பதுரை ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளார்கள். இதனிடையே திமுகவைச் சேர்ந்த அப்பாவு 100 சதவீதம் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறினார்.மறுவாக்கு எண்ணும் பணியில் 24 அதிகாரிகள் ஈடுபட்டனர்.  கூட்ட அரங்குக்கு வெளியே சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனிடையே தற்போது நிலவரப்படி கடைசி மூன்று சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கை அதாவது 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 1508 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு 4 மணிநேரத்தை உயர்நீதிமன்றம் ஒதுக்கி உள்ளது. சில மணி நேரத்தில் வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory