» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரஜினியும் கமலும் இணைவதாக கூறுவது ஏமாற்று வேலை : அமைச்சர் உதயகுமார் பேட்டி

புதன் 20, நவம்பர் 2019 6:08:33 PM (IST)தமிழக நலனுக்காக நடிகர்கள் ரஜினியும் கமலும் இணைவதாக கூறுவது ஏமாற்று வேலை என  தென்காசியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

தென்காசி புதிய மாவட்டம் துவக்க விழா வரும் 22ம் தேதி தென்காசியில் நடைபெறுகிறது. விழா நடைபெறும் இசக்கி மஹால் வளாகத்தினை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார் பின்னர் நடைபெற்ற விழா ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து 5 மாவட்டங்களை அறிவித்த பெருமை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையே சாரும். இம் மாவட்டங்களில்  முதன் முதலாக தென்காசி மாவட்டம் துவக்க விழா 22ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவினை தென்காசியிலேயே நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். விழா சிறப்பாக நடைபெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கு வந்த சீன அதிபரை தமிழகத்தில் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். சீன அதிபர் எவ்வித இடையூறும் இன்றி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சீனா திரும்பினார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்த தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் மீது முதல்வர் நம்பிக்கை வைத்து தென்காசியை முன்னிலைப்படுத்த  மாவட்ட துவக்க விழாவினை அறிவித்துள்ளார். 

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்வர் மீது நம்பிக்கை வைத்து அவரை முன்னிலைப்படுத்த வேண்டும். இவ்விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்ளும் பயனாளிகள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அரசுத்துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அரசுக்கு பெருமை பெற்றுத் தருவது அதிகாரிகள் கைகளில்தான் உள்ளது. தென்காசியில் நடைபெறும் விழா போன்று மற்ற புதிய மாவட்ட துவக்க விழாவும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

பின்னர் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 40 ஆண்டு கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.  அவரது கடுமையான உழைப்பால் முதல்வர் பதவியை பெற்றுள்ளார். தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அவர் அழைத்துச் செல்கிறார். சீன அதிபரையும், நமது பிரதமரையும் மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து அதிசயங்களை படைத்தவர் முதல்வர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மக்கள் நலனுக்காக இணைந்து பணி செய்ய தயாராக இருப்பதாக அவர்கள் கூறுவது ஏமாற்று வேலை என கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி, கூடுதல் அரசு செயலாளர் அன்சுல் மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், தென் மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட கலெக்டர்கள் நெல்லை ஷில்பா பிரபாகர், தென்காசி அருண் சுந்தர் தயாளன், நெல்லை சரக டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட எஸ்.பி.,கள் நெல்லை ஓம் பிரகாஷ் மீனா, தென்காசி சுகுணாசிங், எம்.எல்.ஏ.,கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், முன்னாள் எம்.பி., பிரபாகரன், தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார், தாசில்தார்கள் தென்காசி சண்முகம், செங்கோட்டை ஒசனா பெர்ணாண்டோ, கடையநல்லூர் அழகப்பராஜா, மாவட்ட பிரிவு ஹென்றி பீட்டர், தென்காசி  டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா, அரசு வழக்கறிஞர்கள் சின்னத்துரை பாண்டியன், கார்த்திக்குமார், அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர செயலாளர்கள் சுடலை, குட்டியப்பா (ஏ) கிருஷ்ணமுரளி, ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்லப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory