» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிமுக பாஜக உறவால் மருத்துக்கல்லூரிகள் கிடைத்தது : தென்காசியில் முதல்வர் பேச்சு

வெள்ளி 22, நவம்பர் 2019 1:15:49 PM (IST)

எதிர்க்கட்சி மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஒரு குடும்பத்தை தான் வளர்த்தது, ஆனால் அதிமுக பாஜக உறவால் தமிழகத்திற்கு 5 மாத‌த்தில் 6 மருத்துக்கல்லூரிகள் கிடைத்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 8 தாலுக்காக்கள், 2 கோட்டங்கள் அடங்கிய புதிய மாவட்டம் அறிவிப்பு சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட தொடக்க விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 5 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகித்தார். அமைச்சா்கள் உதயகுமார், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.  

விழாவில் முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டுகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தென்காசி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.  ராமநதி - ஜம்பு நதி இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. செண்பகவல்லி அணை - கன்னியா மதகு பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தாமிரபரணி-நம்பியாறு-கருமேணி ஆறுகள் இணைப்பு திட்டம் 2020 டிசம்பர் 20ஆம் தேதி செயல்படுத்தப்படும். தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். நாடே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஒரு குடும்பத்தை தான் வளர்த்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 மாத‌த்தில் 6 மருத்துக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.  

உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களின் கோரிக்கைப்படி நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory